நிரந்தர ரேஷன் கடை அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
குன்னூர் : குன்னூர் அருகே நிரந்தர ரேஷன் கடை அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிய, தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வண்டிச்சோலை ஊராட்சிக்குட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோடமலை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர்.
இதனால், அப்பகுதி மக்கள் தங்களது கிராமத்திற்கு நியாயவிலை கடை வேண்டும் என கடந்த 35 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் முறையீட்டு வந்த நிலையில் அப்பகுதியில் தற்காலிக கட்டிடத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடையை கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரும், தற்போதைய தமிழக அரசு தலைமை கொறடாவுமான ராமசந்திரன் திறந்து வைத்தார்.
இருப்பினும் அந்த ரேஷன் கடை தற்காலிக கட்டத்தில் செயல்பட்டு வந்ததால் அதற்கென்று நிரத்தர கட்டிடம் அமைப்பதற்கு, அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின் அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது.
அதற்கான பூமி பூஜையும் நேற்று கிராம தலைவர் ராஜகுலேந்திரன் தலைமையில் போடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திமுக செயற்குழு உறுப்பினர் சுனிதா, பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன் மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.