தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளை களமிறக்கி தப்பிவிடலாம் என்ற கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும்: விஜய்க்கு கலை இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம்

சென்னை: எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும் என்று கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். கலை இலக்கியவாதிகள், சமூகச்செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு 7.20 மணியளவில் நடிகர் விஜய்யை காணவந்த பொதுமக்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இவ்வேளையில், தவறான தகவல்களை பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதை காணச் சகியாமல் நாங்கள் இந்த கூட்டறிக்கையை வெளியிடுகிறோம். விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.

Advertisement

ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்க தெரிவு செய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்த பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம். கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்த பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகாமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுய ஒழுங்கமின்றியும் நடந்து கொண்டனர்.

ஆனால் விஜய் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்ததன் விளைவே இந்த அநியாய மரணங்கள். தன்னை காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னாலேயே அலைய விட்டதும் தான் உயிரிழப்புக்கு காரணம் என்பதை காணொலிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லை எனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜயின் ஆதரவாளர்கள் சிலர் பரப்ப தொடங்கினர்.

மணிப்பூர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்த குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல. இந்த கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் கடந்த 30ம் தேதி விஜய் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார். தன்னால் தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்ற உணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொலி விளக்கத்தில் அரசின் மீது பழி சுமத்தி விட்டு தப்பித்து விடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது.

கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வை தருவதாக, அடிமை சிந்தனைக்கு எதிராக தன் மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மை தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழி நடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன.

எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம்.

விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர் நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, ஜனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எம்பிக்கள் து.ரவிக்குமார், சல்மா, எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் கவிஞர் அறிவுமதி, பழனிபாரதி, யுகபாரதி, கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் ஹாஜா கனி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஊடகவியலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ‘நக்கீரன்’ கோபால் உள்ளிட்டவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர் நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

Advertisement