விதிமுறைகளை பின்பற்றாத 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தேர்தல் கமிஷன்: தமிழ்நாட்டில் மட்டும் 22 கட்சிகள்
புதுடெல்லி: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ விதிகளின் கீழ், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்கின்றன. தற்போது 6 தேசிய கட்சிகள், 67 மாநில கட்சிகள், 2854 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள், தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்றால் அவற்றின் பதிவு நீக்கப்படும்.
இதுகுறித்து, கடந்த ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் நிலவரங்கள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல் கேட்டிருந்தது. இந்த தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக 345 அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 334 அரசியல் கட்சிகளை தலைமை தேர்தல் ஆணையம் தற்போது நீக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 22 அரசியல் கட்சிகளின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நீக்கம் செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இனிமேல் நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் கட்சி சார்பாக எந்த வேட்பாளரையும் நிறுத்த முடியாது. அதேநேரத்தில், நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.