விதிமுறைகளை பின்பற்றாத மேலும் 476 கட்சிகளை நீக்கும் பணி தொடக்கம்: தேர்தல் ஆணையம் தகவல்
புதுடெல்லி: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். எந்தவொரு அமைப்பும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின் சில சலுகைகள் மற்றும் பலன்களை பெறுகின்றன. இதற்காகவே சிலர் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதும் உண்டு. இவ்வாறான கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் வெறும் சலுகைகளை மட்டுமே பெற்று வரும். அத்தகைய செயல்படாத கட்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை பதிவுப் பட்டியலில் இருந்து நீக்கும் தேர்தல் சீர்த்திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதன்படி முதற்கட்டமாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. அதைத் தொடர்ந்து மேலும் 476 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கட்சிகள், 2019 முதல் கடந்த 6 ஆண்டில் எந்த தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது உள்ளிட்ட முக்கிய விதிகளை பின்பற்றவில்லை. இதனால் இக்கட்சிகளை பதிவு பட்டியலில் இருந்து நீக்கம் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. இதன்படி, உபியில் 121, மகாராஷ்டிராவில் 44, தமிழ்நாட்டில் 42, டெல்லியில் 41 கட்சிகள் நீக்கப்பட உள்ளன. நவம்பரில் தேர்தல் நடக்கும் பீகாரில் 15 கட்சிகள் நீக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.