புதிய விதிகளை மாநிலங்கள் உருவாக்க வேண்டும் நடைபாதை பாதசாரிகள் பலியானால் அதிகாரிகள் மீது சட்டம் பாயும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி கடந்த 2012ம் ஆண்டு மருத்துவர் எஸ்.ராஜசேகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் 35,221 பாதசாரிகள் விபத்துகளில் உயிரிழந்ததும், 54,568 இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாததால் பலியானதும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய விலங்கியல் பூங்கா அருகே உள்ள மதுரா சாலையில் பாதசாரிகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க எந்தவித வசதியும் இல்லாததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், இதனை ‘கடுமையான பாதுகாப்பு குறைபாடு’ என்று நேற்று கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, நாடு தழுவிய அளவில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, டெல்லி மதுரா சாலையில் ஏழு மாதங்களுக்குள் பாதுகாப்பான நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 50 நகரங்களில் நடைபாதைகள் குறித்து தணிக்கை நடத்த வேண்டும். அனைத்து மாநிலங்களும் ஆறு மாதங்களுக்குள் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பாதசாரிகள் பாதுகாப்புக்கென பிரத்யேக விதிகளை உருவாக்க வேண்டும்.
மேலும், சாலை வடிவமைப்பு அல்லது பராமரிப்புக் குறைபாடுகளால் ஏற்படும் பாதசாரி உயிரிழப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களைப் பொறுப்பாக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது, தவறான வழித்தடத்தில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது, கண்ணைப் பறிக்கும் எல்.இ.டி முகப்பு விளக்குகளைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளையும் கடுமையாக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ‘பாதுகாப்பான நடைபாதைகளைப் பெறுவதற்கான பாதசாரிகளின் உரிமை, இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உறுதிசெய்யப்பட்ட வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும்’ என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.