நடப்பு கல்வியாண்டில் RTE ஒதுக்கீட்டின் கீழ் 81 ஆயிரம் விண்ணப்பங்கள் , அக்.30, 31ல் மாணவர் சேர்க்கை... யாருக்கெல்லாம் முன்னுரிமை?
சென்னை : தமிழ்நாட்டில் ஆர்டிஇ எனப்படும் பள்ளிகள் கல்வி உரிமை ஒதுக்கீட்டின் கீழ், 81,000க்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2025-26 கல்வியாண்டில், தமிழ்நாடு முழுவதும் 7,7 17 பள்ளிகள், கல்வி உரிமை ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்துள்ளனர். RTE சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 81,927 மாணவர்கள் LKG-க்கும், 89 மாணவர்கள் ஒன்றாம் வகுப்புக்கும் விண்ணப்பித்துள்ளனர். அக்.30, 31 தேதிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த செயல்முறை முடிந்ததும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் RTE ஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். RTE ஒதுக்கீட்டின் கீழ், சேர்க்கப்படும் மாணவ, மாணவிகளிடம் கல்விக் கட்டணம் பெறப்படாது. RTE சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். RTE சட்டத்தின்படி, திருநங்கைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25% மாணவர் சேர்க்கையை வெளிப்படையான முறையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது, "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.