ஆர்எஸ்எஸ்யை புகழ்ந்த பிரதமர் மோடியின் கருத்துகள்; வரலாற்றை மறைக்கும் ஆபத்தான முயற்சி: மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை: விடுதலை திருநாள் உரையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ்யை “உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம்” என்றும், நூற்றாண்டுக் கால அதன் அர்ப்பணிப்புக்காகவும் பாராட்டிப் பேசினார். இந்தக் கருத்துகள், ஆர்எஸ்எஸின் உண்மையான வரலாற்றையும், அதன் பாசிச ஆதரவு அடிப்படை நிலைப்பாடுகளையும் முற்றிலும் மறைக்கின்றன. ஆர்எஸ்எஸ் தனது தொடக்கக் காலம் முதலே இந்தியாவின் ஜனநாயக, மதச்சார்பின்மை, சமத்துவ அரசியல் அமைப்பை எதிர்த்து, அதனை ஒரு சங்கி மனநிலை கொண்ட அரசாக மாற்றும் திட்டத்தோடு இயங்கி வருகிறது.
விடுதலைக்கு முன்பும் பின்னும், ஆர்எஸ்எஸ் இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை இழிவுபடுத்தி, அதை ஏற்க மறுத்தது. ஆர்எஸ்எஸ்யை “சமூகச் சேவையின் முன்னோடி” எனப் பிரதமர் புகழ்வது, இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களுக்கும் எதிரான அதன் செயல்பாடுகளை மறைக்கும் முயற்சியாகும்.இந்தியாவின் சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம் இவை அனைத்தும் ஆர்எஸ்எஸின் அரசியல் நோக்கங்களுக்கு முரணானவை என்பது வரலாற்று உண்மை. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை நேசிக்கும் அனைவரும் பிரதமர் மோடியின் உரையைக் கண்டிக்க வேண்டும். இந்தியாவின் அடிப்படை அடையாளங்களை அழிக்கும் எந்த முயற்சியையும் ஊக்குவிக்கக் கூடாது.
ஆர்எஸ்எஸ்ஐ பற்றி உண்மையைச் சொல்லாமல், அதன் வரலாற்றை அழகு படுத்துவது, தேசவிரோதச் செயல்பாடுகளுக்குப் பச்சைக் கொடி காட்டுவதாகும். ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு வரலாறு, இந்தியாவின் தியாக வரலாற்றின் ஒரு கரும் பக்கம். பிரதமரின் பாராட்டுகள் வரலாற்றைச் சிதைக்கும் வஞ்சகமான அரசியல் முன்னெடுப்பே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.