ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்த மோடியின் கருத்துக்கள் வரலாற்றை மறைக்கும் ஆபத்தான முயற்சி: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: விடுதலை திருநாள் உரையில், பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்யை “உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம்” என்று பாராட்டிப் பேசினார். இந்த கருத்துகள், ஆர்எஸ்எஸ்சின் உண்மையான வரலாற்றையும், அதன் பாசிச ஆதரவு அடிப்படை நிலைப்பாடுகளையும் முற்றிலும் மறைக்கின்றன. விடுதலைக்கு முன்பும் பின்னும், ஆர்எஸ்எஸ் இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை இழிவுபடுத்தி, அதை ஏற்க மறுத்தது. ஆர்எஸ்எஸ்யை “சமூகச் சேவையின் முன்னோடி” என பிரதமர் புகழ்வது, இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களுக்கும் எதிரான அதன் செயல்பாடுகளை மறைக்கும் முயற்சியாகும். ஆர்எஸ்எஸ்ஐ பற்றி உண்மையைச் சொல்லாமல், அதன் வரலாற்றை அழகு படுத்துவது, தேசவிரோதச் செயல்பாடுகளுக்குப் பச்சைக் கொடி காட்டுவதாகும். ஆர்எஸ்சின் நூற்றாண்டு வரலாறு, இந்தியாவின் தியாக வரலாற்றின் ஒரு கரும் பக்கம். பிரதமரின் பாராட்டுகள் வரலாற்றைச் சிதைக்கும் வஞ்சகமான அரசியல் முன்னெடுப்பே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.