மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு: கருப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசிக்கு ரூ.36 கோடி நிதி
பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தரமான புற்று நோய் சிகிச்சை மற்றும் உரிய பராமரிப்பு சேவைகளை அனைவருக்கும் வழங்கிட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மாநில அளவிலான முதன்மை புற்றுநோய் மையமாக அறிவிக்கப்படும். அதனை தரம் உயர்த்தி உலகத்தரம் வாய்ந்த புற்று நோய் கண்டறிதல் மற்றும் கிகிச்சை, நோய் ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை 800 படுக்கைகளுடன் கூடிய தன்னாட்சி பெற்ற மையமாக செயல்படும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.120 கோடி நிதி வழங்கப்படும். ஆரம்ப நிலையிலேயே புற்று நோய் கண்டறிதலை அறிமுகப்படுத்திட இடைநிலை மற்றும் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளுக்கு தேவையான நவீன மருத்துவ கருவிகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை ரூ.110 கோடி மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் வழங்கிட அரசு திட்டமிட்டுள்ளது.
கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கவும் தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிடவும் தப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென 2025-26 ம் ஆண்டில் ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும். அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகில் சென்று நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம், முக்கிய புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய் ஆகியவற்றை கண்டறிவதற்கான சோதனைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல் ஆகிய பல்வேறு சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிட ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய நல்வாழ்வு குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ரூ.2,754 கோடியும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்டத்திற்கு ரூ.1,092 கோடியும, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.1,461 கோடியும், அவசர ஊர்தி சேவைகளுக்கு ரூ.348 கோடியும் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.