பட்டப்பகலில் நிதிநிறுவனத்தில் புகுந்து துணிகரம்; வெறும் 18 நிமிடத்தில் ரூ.15 கோடி தங்கம் கொள்ளை: தப்பியோடிய மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், நிதி நிறுவனம் ஒன்றில் புகுந்து 14 கோடி ரூபாய் மதிப்பிலான 14.8 கிலோ தங்கத்தையும் 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள சிகோரா பகுதியில் இயங்கி வரும் சிறிய நிதி நிறுவன கிளை வழக்கமாக காலை 10.30 மணிக்கு திறக்கப்படும். ஆனால் தற்போது பண்டிகை காலம் என்பதால், அந்த நிதி நிறுவனத்தின் கிளை சம்பவத்தன்று காலை 8 மணிக்கே திறக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் நிதி நிறுவனத்தின் பாதுகாவலர் யாரும் பணியில் இல்லை; மாறாக ஆறு ஊழியர்கள் மட்டுமே நிதி நிறுவனத்தில் அலுவல் பணியை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல், காலை 8.50 மணியளவில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்துள்ளது. வெறும் 18 நிமிடங்களுக்குள், அதாவது 9.08 மணிக்கு வெளியேறிய அந்த கும்பல், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 14.875 கிலோ தங்கத்தையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளையர்கள் கைகளில் ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை என்றாலும், ஒருவன் தனது இடுப்பில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வங்கி ஊழியர்கள், தங்கள் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, 45 நிமிடங்கள் தாமதமாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து ஜபல்பூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அதுல் சிங் கூறுகையில், ‘சரியான நேரத்தில் தகவல் கொடுத்திருந்தால் கொள்ளையர்களைப் பிடித்திருக்க முடியும். தற்போது கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’ என்று தெரிவித்தார். வெறும் 18 நிமிடங்களுக்குள், நிதி நிறுவனத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 14.875 கிலோ தங்கத்தையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.