கே.கே.நகரில் பிரியாணி கடை உரிமையாளரை கத்திமுனையில் தாக்கி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது
சென்னை: கே.கே.நகரில் பிரியாணி கடை உரிமையாளரை கத்திமுனையில் தாக்கி பணம் பறித்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர்.நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் பிரபு(35). இவர் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே பிரியாணி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்க ேநற்று தனது பைக்கில் கோயம்பேடு நோக்கி ெசன்றார். அப்போது கே.கே.நகர் வன்னியர் தெரு அருகே செல்லும் போது, பைக்கில் வந்த 3 பேர், திடீரென பிரபுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். அதற்கு அவர் தர மறுத்ததால் கத்தியை காட்டி அவரை சரமாரியாக தாக்கி ரூ.4,300 பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் பிரபு கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, பிரபல ரவுடிகளான கே.கே.நகர் 63வது தெருவை சேர்ந்த அபிஷேக்(25), போரூர் மதனந்தபுரம் பகுதியை சேர்ந்த நரேன்(25), தேனாம்பேட்டை திரு.வி.க குடியிருப்பை சேர்ந்த பிரகாஷ்(43) ஆகியோர் என தெரியவந்தது. அபிஷேக் மீது 10 குற்ற வழக்குகள், நரேன் மீது 10 வழக்குகள், பிரகாஷ் மீது 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் 3 ரவுடிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஒரு கத்தி, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.