இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டம் :இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு
கோவை: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் இன்று காலை கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு ஆளில்லாத ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் வயோமித்ரா என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும். இது முடிந்தவுடன் 2 ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளோம்.
2027ம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம். இதில் இஸ்ரோ மட்டுமல்லாமல் ஏரோ, நேவி உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். விண்வெளித்துறையில் உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம்.
நிலாவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா நமது நாட்டுடையது. செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல் நாடு இந்தியாதான். ராக்கெட் இன்ஜினிலும் சாதனைகளை படைத்துள்ளோம். ஏஐ தொழில்நுட்பம் விண்வெளித் துறையிலும் வந்துவிட்டது. வயோமித்ரா என்பதும் ஏஐ டெக்னாலஜிதான். சந்திராயன்-4 நிலாவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் ஏஐ ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.