திரையுலக பிரபலங்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி: வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம்
சென்னை: வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இதையடுத்து மிகவும் உடல் மெலிந்து காணப்பட்ட அவர், படப்பிடிப்புகளில் வழக்கம்போல் கலந்துகொண்டு நடித்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி சென்னையில் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென்று வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை பெருங்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடம்பில் நீர்ச்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர், நேற்றிரவு 8.30 மணியளவில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்பட சில உறுப்புகள் செயலிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது. சின்னத்திரை நிகழ்ச்சியில் ரோபோ வேடம் அணிந்து நடித்ததால், அவரது பெயருடன் ரோபோ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது. ரசிகர்கள் மத்தியில் ரோபோ சங்கர் என்ற பெயரில் பிரபலமானார். அவரது தனித்துவமான உடல்மொழியாலும், நகைச்சுவை நடிப்பாலும் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பல குரலில் பேசி அசத்தும் திறமை பெற்ற அவர், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மிமிக்ரி செய்துள்ளார்.
கடந்த 2007ல் ரவி மோகன், பாவனா நடித்த ‘தீபாவளி’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகமான ரோபோ சங்கர், தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் ‘புலி’, அஜித் குமாருடன் ‘விஸ்வாசம்’, தனுஷுடன் ‘மாரி’, சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து அசத்திய ரோபோ சங்கர், விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘சக்க போடு போடு ராஜா’ உள்பட பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் ஸ்கோர் செய்திருந்தார். கடைசியாக ‘சொட்ட சொட்ட நனையுது’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ஹீரோவாக ஒரு படத்திலும், குணச்சித்திர வேடங்களில் சில படங்களிலும் நடித்து வந்தார். அவரது மனைவி பிரியங்கா டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திரைப்படங்களிலும் நடிக்கிறார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, விஜய் நடித்த ‘பிகில்’ என்ற படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து நடித்து வருகிறார். ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்பட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ரோபோ சங்கரின் உடலுக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை நட்சத்திரங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்பட்டது.