ரூ.7 கோடி கொள்ளைக்கு பயன்படுத்திய இன்னோவா கார் திருப்பதியில் கண்டுபிடிப்பு: போலீஸ் தீவிர விசாரணை
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த புதன்கிழமை ஏடிஎம்மில் பணம் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட சிஎம்எஸ் ஏஜென்சி வாகனத்தை மறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி, இன்னோவா காரில் வந்த மர்ம கும்பல் ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கை மிகத்தீவிரமாக விசாரித்துவரும் போலீசார், சிஎம்எஸ் நிறுவன வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மற்றும் துப்பாக்கி ஏந்திய 2 பாதுகாவலர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்திவருகிறது. அவர்களது பின்னணி மற்றும் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கொள்ளைச்சம்பவம் நடந்தபோது சிஎம்எஸ் வாகனத்தில் பணியில் இருந்த 4 பேருடைய செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரிப்பதுடன், கொள்ளைச் சம்பவம் நடந்த டைரி சர்க்கிளிலிருந்து கே.ஆர்.புரம் வரை 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த இன்னோவா கார் ஆந்திரா நோக்கி சென்றதைக் கண்டுபிடித்த நிலையில், அந்த இன்னோவா காரை திருப்பதியில் கண்டுபிடித்தனர். அந்த காரில் பணம் இல்லாததால், கொள்ளையடிக்கப்பட்ட பணம் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதால், திருப்பதி போலீசாருடன் சேர்ந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.