கோயம்பேடு மார்க்கெட்டில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்: போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளியாட்கள் மதுஅருந்திவிட்டு அட்டகாசம் செய்வதுடன் சண்டையிட்டு கொள்கின்றனர். அத்துடன் மார்க்கெட்டில் தனியாக நடந்துச்செல்லும் வியாபாரிகள், கூலி தொழிலாளர்களை மறித்து கத்தியை காட்டி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து சென்றுவிடுகின்றனர். இதன்காரணமாக வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட்டில் செல்போன், செயின் பறிப்பு, பைக் திருட்டு அதிகரித்துவந்த நிலையில், வழிப்பறி அதிகரித்து வருகிறது.
எனவே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்துவரவேண்டும். ஆசியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் போலீசார் பாதுகாப்பு இல்லாததால் குற்றச் சம்பவங்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இனிமேலாவது காவல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் மார்க்கெட்டில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.