ரோடு ஷோ, பொதுக்கூட்டத்துக்கு 'நோ பர்மிஷன் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றிய விஜய்: 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி; காவல்துறை கடும் நிபந்தனை
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக சார்பில் கடந்த 5ம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் கரூர் சம்பவத்தை காரணம் காட்டி அனுமதி மறுத்த காவல்துறை, பொதுக்கூட்டம் நடத்தி கொள்ளலாம் என தெரிவித்தது. பின்னர் பொதுக்கூட்டத்திற்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை என பக்கத்து மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருவார்கள் என்பதால் அதற்கும் அனுமதி மறுத்து, அரங்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சந்திப்பு போல மக்கள் சந்திப்பு நிகழ்வாக நடத்திக் கொள்ளலாம் என அனுமதித்தனர். இதையடுத்து 9ம்தேதி (நாளை மறுதினம்) புதுச்சேரி அம்பேத்கர் சாலையில் உள்ள புதிய துறைமுக வளாகத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர்.
இதற்கு அனுமதி வழங்கிய காவல்துறை, பல்வேறு நிபந்தனைகள் தவெகவுக்கு விதித்து உள்ளது. கூட்டத்தில் அதிகபட்சமாக 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகைக்கும் அனுமதி தரப்படாது. குடிநீர், மொபைல் டாய்லெட் வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக செய்திருக்க வேண்டும். விஐபிக்களுக்கான ஆம்புலன்ஸ், பொதுமக்களுக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், அனைத்தையும் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டம் நடைபெறும் வளாகத்தை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என தவெக நிர்வாகிகளிடம் போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.