ரோடு ஷோவுக்கு வழிமுறைகள் வகுப்பது குறித்து நவ.6ல் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை : பரப்புரை, ரோடு ஷோ கூட்டங்களை கட்டுப்படுத்த நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நவ.6ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோக்களுக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும்' என கெடு விதித்தது.
இதைத் தொடர்ந்து, கரூரில் நடந்தது போன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களின் போது கூட்டங்களை கட்டுப்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக வரும் நவ.,6ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மூத்த அமைச்சர்கள் தலைமையில் தலைமை செயலகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட, பார்லிமென்ட், சட்டசபையில் பிரதிநிதித்துவம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.