நத்தம் பகுதியில் மணல் லாரிகளால் சாலைகள் சேதம்
நத்தம்: நத்தம் பகுதியில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரடிக்குட்டு, பாதசிறுகுடி, ஆவிச்சிபட்டி, கோட்டையூர், சாத்தம்பாடி, குடகிப்பட்டி, பிள்ளையார்நத்தம் பகுதிகளில் கிரசர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஜல்லி கற்கள், தூசி, எம்.சாண்ட் போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் எம்.சாண்ட் மணல், ஜல்லிகளை லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்து வருகின்றனர். எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும்போது, தார்ப்பாயால் மூடி தூசி பறக்காமல் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. தற்போது இதற்கு பதிலாக குழாய் மூலம் தண்ணீர் தெளித்து நனைத்து எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் ஈரமான மணலில் இருந்து சாலையில் நீர் வடிகிறது. தொடர்ந்து இவ்வாறு எடுத்து செல்லப்படுவதால் இப்பகுதிகளில் சாலைகள் சேதமடைவதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: எம்.சாண்ட் மணல், கிரசர் தூசி ஏற்றிச் செல்லும் டிராக்டர், கனரக வாகனங்களால் சாலை சேதம் அடைகிறது. வாகனங்களில் தண்ணீர் வடிவது இதற்கு முக்கிய காரணம். எனவே, இதை தவிர்த்து, முறையாக தார்ப்பாயால் முழுமையாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்றனர்.