சாலை மறியல் போராட்ட வழக்கு; ஒன்றிய மாஜி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை: மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி
ஜான்சி: மின்வெட்டைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் ஒன்றிய இணையமைச்சரான பிரதீப் ஜெயின் ஆதித்யா உள்ளிட்ட 14 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜான்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பரிச்சா அனல்மின் நிலையம் அருகே, கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி மின்வெட்டுப் பிரச்னையை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய இணையமைச்சருமான பிரதீப் ஜெயின் ஆதித்யா தலைமையில் ஜான்சி - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்ததால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ஜான்சி கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரதீப் ஜெயின் ஆதித்யா மற்றும் மற்ற 13 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்தார்.
இருப்பினும், தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் தனிநபர் ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பிரதீப் ஜெயினின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.