சாலை பணி, தெருநாய்களை பிடிக்க 26 புதிய வாகனங்கள்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை: சென்னை மாநகராட்சியில் 26 புதிய வாகனங்கள் பயன்பாட்டை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பராமரிப்பு பணிகளை சாலைப்பணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஐடிபிஐ வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்களையும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்,
பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திடும் வகையில், மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் தலா ரூ.10.43 லட்சம் என மொத்தம் ரூ.52.17 லட்சம் மதிப்பீட்டிலான 5 நாய் பிடிக்கும் வாகனங்கள் என ஒட்டுமொத்தமாக 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் (சுகாதாரம்) ஜெயசீலன், துணை ஆணையர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) பிரதிவிராஜ், நிலைக்குழு தலைவர்கள் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), சர்பஜெயாதாஸ் (வரி விதிப்பு (ம) நிதி), விஸ்வநாதன் (கல்வி), ஐடிபிஐ வங்கியின் மண்டல தலைமை பொது மேலாளர் மஞ்சுநாத் பாய், ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியின் துணைத் தலைவர் திரு.டி.அஞ்சான், மண்டல மேலாளர் கமல்நாத் மற்றும் மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.