முகப்பேர், பாடிக்குப்பம் சாலையில் மரம் விழுந்து கார் சேதம்: டிரைவர் உயிர் தப்பினார்
அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பாடிக்குப்பம் பிரதான சாலையில் பழமைவாய்ந்த ராட்சத மரம் விழுந்தது. இதில் அந்த மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த கார் சேதம் அடைந்தது. அந்தகாரின் உள்ளே அமர்ந்து செல்போனில் பேசிகொண்டிருந்த டிரைவர் நாகலிங்கம்(39) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த மரம் விழுந்ததால் உயரழுத்த மின்கம்பி அறுந்துவிழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் வந்தனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சாலையில் விழுந்துகிடந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கம்பியை சீரமைத்து மின்விநியோகம் வழங்கினர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘’முகப்பேர் சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் பல மரங்கள் விழும் நிலையில் உள்ளது. எனவே பருவ மழை தொடங்குவதற்கு முன்பே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மரக்கிளைகளை வெட்ட வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். இதுசம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். எனவே,சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.