நான்கு வழி சாலையில் மிக நீண்ட பணி: தோட்டியோடு, புத்தேரி, வழுக்கம்பாறையில் பால பணிகள் 60 சதவீதம் நிறைவு: 2026 மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
நாகர்கோவில்: தோட்டியோடு, புத்தேரி, வழுக்கம்பாறையில் பால பணிகள் 60 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பால பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். கன்னியாகுமரி முதல் காரோடு வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் பொற்றையடி, வழுக்கம்பாறை, புத்தேரி, தோட்டியோடு உள்ளிட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் தோட்டியோட்டில் குளத்தின் மேல் பாலம் அமைக்கும் பணிகள் மிக வேகமாக நடக்கின்றன.
இந்த பாலம் ஒய் வடிவில் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் 683 மீட்டர் நீளத்தில் அமைகிறது. கன்னியாகுமரி - காரோடு வரையிலான நான்கு வழிச்சாலையில் தோட்டியோட்டில் அமையும் பாலம் தான் மிகப்பெரிய பாலம் ஆகும். இந்த பாலத்துக்கான இணைப்பு சாலை முடிவடைந்து, மேற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பாலத்துக்காக கனியான்குளம் பகுதியில் இருந்து சாலை தொடங்குகிறது.
இதற்காக சாலையின் இருபுறமும் கான்கிரீட் பக்க சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்தால், சாலை அமைக்கப்பட்டு தோட்டியோடு பாலம் வரை இணைக்கப்பட்டு விடும். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்துக்குள் இந்த பணி முடிவடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதே போல் புத்தேரி பகுதியிலும் பால பணிகள் வேகமாக நடக்கின்றன.
வழுக்கப்பாறை, பொற்றையடி வரையிலான பால பணியும் தற்போது 60 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளன. இந்த 4 பால பணிகளும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை தாக்கம் அதிகமாக இருந்தால், இந்த பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 2026 இறுதிக்குள் நான்கு வழிச்சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மண் தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்தால், பணிகளை அதிக வேகமாக செய்து முடிக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.