சாலை வசதி கேட்ட கர்ப்பிணி பெண் பிரசவ தேதி எப்போது? பாஜ எம்பி கிண்டல்: மபி அமைச்சரும் சர்ச்சை பதில்
அதில், ‘மத்தியப் பிரதேசத்தில் 29 எம்.பி.க்களையும் வெற்றி பெறச் செய்தீர்கள். இப்போது எங்களுக்கு தார்ச்சாலை வசதி கிடைக்குமா?’ என்று அவர் கேட்டிருந்தார். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரும், அந்த தொகுதி எம்.பி.யும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், ஓராண்டு கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், லீலா சாஹுவும் மேலும் ஏழு கர்ப்பிணிப் பெண்களும் மீண்டும் தங்கள் கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.
அவர்கூறுகையில், ‘எனக்கு குழந்தை பிறந்த பின்பு டெல்லிக்கு சென்று ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியிடம் மனு அளிப்பேன். விரைவில் சாலை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்துவேன்’ என்று கூறியிருந்தார். ஆனால், இதற்கு பதிலளித்த பாஜ எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, ‘எங்களிடம் ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு பிரசவத்திற்கும் தேதி நிர்ணயம் உண்டு. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாலையை அமைத்துவிடுவோம்.
தேவைப்பட்டால் எங்களிடம் உள்ள ஹெலிகாப்டர்களையும், விமானங்களையும் எடுத்து வருகிறோம். கவலைப்பட வேண்டாம்.மக்கள் எந்த வகையிலாவது சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்’ என்று கிண்டலாக கூறி, கர்ப்பிணிகளின் கோரிக்கையை அலட்சியப்படுத்தியுள்ளார். இதேபோல் பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங், ‘யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டால், உடனே நாங்கள் லாரியுடன் செல்ல முடியுமா? எல்லாவற்றுக்கும் நடைமுறை என்ற ஒன்று உள்ளது’ என்று கூறியது சர்ச்சையாகி உள்ளது.