சாலை விபத்துகளை தவிர்க்க மூன்று சாலை சந்திக்கும் திருவள்ளூர் - காக்களூர் பைபாஸ் சிக்னலில் ரவுண்டானா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
இப்படி மூன்று சாலை சந்திப்பாக இப்பகுதி இருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருவதால் எப்போதும் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெ.என்.சாலை மற்றும் காக்களூர் பைபாஸ் சாலை சந்திப்பு குறுகலாக இருந்ததால் ஆவடியில் இருந்து வரும் வாகனங்களும் ஜெ.என்.சாலையில் இருந்து அச்சாலை வழியாக பிரிந்து செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தன. எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், சமீபத்தில் போக்குவரத்து நெரிசலை கண்டுப்படுத்த, சாலையை அகலப்படுத்தும் நோக்கில் இடையூறாக இருந்த மின்மாற்றி மற்றும் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. இதனால் சாலை விரிவடைந்தது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது. எனினும் ஜெ.என்.சாலை, காக்களூர் பைபாஸ் சாலை பிரிந்து செல்லும் சந்திப்பில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்கின்றனர்.
ஆட்டோ மற்றும் பைக்குககள் தாறுமாறாக செல்கின்றன. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்கள் பெரும்பாலும் இல்லாமல் இருப்பதால் அவ்வழியாக செல்லும் பிற வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வேலைக்குச் செல்வோர், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே காக்களூர் பைபாஸ் சாலை பிரிந்து செல்லும் இடத்தில் ஜெ.என்.சாலை நடுவில் சிறிய அளவிலான ரவுண்டானா அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் போக்குவரத்துக் காவலர்கள் இல்லாவிட்டாலும் வாகன ஓட்டிகள் முறையாக சொல்ல வசதியாக இருக்கும். மேலும் போக்குவரத்து நெரிசலும் குறையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.