வந்தவாசி அருகே அமையப்பட்டு கிராமத்தில் சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
*கால்வாய் அமைக்க கோரிக்கை
வந்தவாசி : வந்தவாசி அருகே அமையப்பட்டு கிராமத்தில் சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.வந்தவாசி நகரின் முக்கிய சாலையான ஆரணி நெடுஞ்சாலையில் நகரத்தை ஒட்டியவாறு உள்ள அமையப்பட்டு கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த சாலையில் ஏற்கனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டதால், நெடுஞ்சாலைத்துறை சாலை மட்டும் அமைத்து கால்வாய் அமைக்காமல் விட்டனர்.
ஊராட்சி நிர்வாகம் சிறிய அளவிலான கால்வாய் அமைத்ததால் முழு கொள்ளளவு தண்ணீரும் அதில் செல்ல முடியாமல் சாலையில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
இங்கு பயிலும் ஏராளமான மாணவர்கள் சாலையில் செல்லும் கழிவுநீரை கடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அமையப்பட்டு கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் அமைந்துள்ள முக்கிய சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.