வாழைப்பந்தல் கூட்ரோட்டில் இருந்து கொருக்காத்தூர் வரை இருவழிச்சாலையாக மாற்றம்
*விரிவாக்கம் செய்ய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரணமல்லூர் : பெரணமல்லூர் அடுத்த வாழைப்பந்தல் கூட்ரோடு பகுதியில் இருந்து கொருக்காத்தூர் வழியாக பச்சையம்மன் கோயில், கலவை மற்றும் ஆற்காடு செல்லும் தார் சாலை அமைந்துள்ளது. இதில் கூட்ரோடு பகுதியில் இருந்து கொருக்காத்தூர் பகுதி வரை அமைந்துள்ள சுமார் 4கி.மீ தார் சாலை ஒரு வழி சாலையாக அமைந்துள்ளதால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் இரு வழித்தடமாக மாற்ற சுமார் ரூ.4.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிக்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சாலையில் குறிப்பிட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்பு பகுதிகள் உள்ளதை அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள உரிமையாளர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந் நிலையில் நேற்று முதல் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆரணி நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் வரதராஜன் ஆய்வு செய்தார். மேலும் அவரது மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.