கோவையில் நடத்திய ‘ரோடு ஷோ’வில் கூட்டம் இல்லாததால் எடப்பாடி பழனிச்சாமி ‘அப்செட்’: பொள்ளாச்சி, ஆனைமலையில் இன்று பிரசாரம்
தொண்டாமுத்தூர்: கோவையில் நடத்திய ரோடு ஷோவில் கூட்டம் இல்லாததால் எடப்பாடி பழனிசாமி ‘அப்செட்’ ஆனார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முதல் கட்டமாக தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். 2ம் கட்டமாக நேற்று தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குக்கிராமங்களில் இருந்து தலைக்கு ரூ.300 வீதம் கொடுக்கப்பட்டு ஏராளமான பெண்கள் பஸ், வேன்களில் மதியம் 3 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். ஆனால் இரவு 7.30 மணிக்குதான் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்தை தொடங்கினார். கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தவர்கள் எடப்பாடி பேச தொடங்கியதுமே கலைந்து சென்றனர். செல்வபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரை வரவேற்க கையில் முளைப்பாரி, பூர்ண கும்பத்துடன் பெண்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். அவர் தாமதமாக வந்ததால் ‘ரோடு ஷோ’ சென்றபோது சாலை வெறிச்சோடியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி கடும் ‘அப்செட்’ ஆனார்.
பிரசார கூட்டங்களில் ஆம்புலன்சை திட்டமிட்டு வரவழைப்பதாக பொய்யான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்து வருகிறார். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மிரட்டலும் விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் நேற்று அவர் செல்வபுரத்தில் பிரசாரம் செய்தபோது சாலையில் சென்ற 3 ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கின. ஆம்புலன்சை வழிமறிப்பதை தடுக்க வேண்டும் என ஏற்கனவே எஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டு இருந்ததால் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டனர்.
முன்னதாக தொண்டாமுத்தூர் காவல் நிலையம் வாசலில் பிரசார வாகனத்தில் இருந்தபடி எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘திமுக வலுவான கூட்டணி அமைத்திருக்கலாம், ஆனால் மக்கள் பலம் எங்களிடம் உள்ளது. அதிமுக-பாஜ என்பது வெற்றி கூட்டணி. அம்மா உணவகத்தில் தரமான உணவுகளை விநியோகிப்போம். ஏழை பெண்களுக்கு தீபாவளி தினத்தில் சேலைகள் வழங்குவோம். ஏழை எளியவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும். மனித-வனவிலங்கு மோதலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார். இன்று மாலை ஆனைமலை மற்றும் பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
பஸ் கண்டக்டருடன் வாக்குவாதம்
கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலையான கோவை-பாலக்காடு ரோட்டில் உள்ள குனியமுத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பேசினார். இதற்காக அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களை வாகனங்களில் அழைத்து வந்து பாலக்காடு சாலையில் குவிக்க தொடங்கினர். அதிமுக தொண்டர்கள் சாலையை மறித்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த அரசு பஸ் செல்ல முடியாமல் அதிமுகவினர் வழிமறித்து நின்றதோடு, பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.