சாலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: 16 பயணிகள் தப்பினர்
தேனி: பெரியகுளம் அருகே குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த 16 பயணிகளும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. பெரியகுளம் அடுத்த எ.புதுப்பட்டி பகுதியில் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, வேனின் முன்பகுதியில் திடீரென புகை வெளியேறியது.
இதனால் பயணிகள் கலக்கம் அடைந்தனர். டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு உடனடியாக சாலையோரம் வேனை நிறுத்தினார். இதையடுத்து, வேனில் இருந்து டிரைவர் மற்றும் 15 பயணிகளும் உடனடியாக கீழே இறங்கிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் வேன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், வேன் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.