குன்னம் அருகே கோவில்பாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல்
*போக்குவரத்து பாதிப்பு
குன்னம் : குன்னம் அருகே கோவில்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா பகுதியில் கோவில்பாளையம் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் நூற்றுக்கணக்கான ஹெக்டர் நிலப்பரப்பில் குருவை பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என மனு அளித்திருந்தனர்.
செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திறப்பதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய மேலாளர் தெரிவித்ததாக கூறுகின்றனர் ஆனால் இதுவரை திறக்கவில்லை இந்நிலையில் இந்த பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை பெய்து வரும் சூழ்நிலையில் நெல்மணிகள் நனைந்து தற்போது முளைக்க தொடங்கி உள்ளன இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்மணிகள் ஏற்றிய டிராக்டர் டிப்பரை அரியலூர் திட்டக்குடி சாலையில் குறுக்கே நிறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வந்த குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பேசி வருகிற புதன்கிழமை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அரியலூர் திட்டக்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.