ரிதன்யா தற்கொலை விவகாரம் சமூக நலத்துறை ஆபீசில் பெற்றோர் ஆஜர்: ஆடியோ தகவல்கள் சமர்ப்பிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ரிதன்யா (27). வரதட்சணை கொடுமையால், திருமணமான 78 நாட்களில் கடந்த மே 28ம் தேதி காரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் மேலும், தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது பெற்றோர்தான் காரணம் என்று கூறி, வாட்ஸ் அப்பில் அவர் பேசிய ஆடியோ வைரலானது. இதுதொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். தற்போது ஜாமீன் பெற்று உள்ளனர்.
இந்நிலையில் ரிதன்யாவின் தற்கொலை தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சமூக நலத்துறை விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமையிலான குழுவினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விசாரணையை தொடங்கினர். குழுவினரின் முன்பு ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் சகோதரர் மிதுன், உறவினர்கள் ஆஜர் ஆகினர்.
அப்போது ரிதன்யாவின் தற்கொலை, வரதட்சணை கொடுமை தொடர்பாக உள்ள ஆதாரங்களுடன் நாளை ஆஜராகுமாறும் கேட்டுக்கொண்டனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி கூறுகையில், தற்கொலை சம்பவம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் சம்மன் வழங்கப்பட்டது. ரிதன்யாவின் பெற்றோர் ஆஜராகி சில ஆடியோ உள்ளிட்ட தகவல்களை வழங்கி உள்ளனர். கவின்குமார் குடும்பத்தினர் ஆஜராகவில்லை. அதனால் அவர்கள் ஆஜராகும்படி மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.