ரிதன்யாவின் மரண வடு ஆறாத நிலையில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் மேலும் ஒரு புதுப்பெண் தற்கொலை: போலீஸ் கமிஷனரை முற்றுகையிட்டு பெற்றோர் கதறல்
திருப்பூர்: அவிநாசி ரிதன்யாவை தொடர்ந்து திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 11 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி இவரது மனைவி சுகந்தி இவர்களது ஒரே மகள் ப்ரீத்தி (26). குப்புசாமி 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்ட நிலையில், பிபிஏ பட்டதாரியான ப்ரீத்திக்கும் ஈரோடு நசியனூரை சேர்ந்த விஜயகுமார்- உமா தம்பதி மகன் சதீஸ்வர் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திருமணம் நடந்தது.
ஆர்கிடெக்சரான சதீஷ்வர் தனியாக அலுவலகம் நடத்தி வந்துள்ளார். திருமணத்தின் போது வரதட்சணையாக 80 பவுன் நகை, சொகுசு கார், ரூ.20 லட்சம் ரொக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ப்ரீத்தியிடம் அவரது கணவரும்,மாமியாரும் கூடுதல் வரதட்ணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த மாதம் 11ம் தேதி ப்ரீத்தி தனது தாய் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார். ப்ரீத்தி குடும்பத்தினருக்கு சின்னக்கரையில் ஒரு டையிங் நிறுவனம் இருந்தது. அதனை விற்பனை செய்தனர்.
இதில் ப்ரீத்திக்கும் பங்கு உள்ளது என்பதை அறிந்த சதீஸ்வர், மனைவியை தொடர்பு கொண்டு வீடு கட்ட ரூ.50 லட்சம் வாங்கி வரும்படி கேட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த ப்ரீத்தி மிகவும் மனவேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ப்ரீத்தி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நல்லூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ப்ரீத்தியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்நிலையில், குடிமங்கலம் எஸ்எஸ்.ஐ உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு மகள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அவிநாசி புதுப்பெண் ரிதன்யா திருமணம் முடிந்த 77வது நாளில் வரதட்சணை கொடுமை உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதை பொறுக்க முடியாமல் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில், திருப்பூரில் புதுப்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.