கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம்; ஒன்றிய அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்: தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: உயர்நீதிமன்றத்தில் ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்திலிருந்து நீக்குவதை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘‘ஒன்றிய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை என்பதை காரணமாக கூறாமல், சட்டத்தின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான நிதியை மாநில அரசே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘ஒன்றிய அரசு போதிய நிதியை விடுவிக்காமல் இருந்து வருவதால், மாநில அரசு எப்படி கட்டாயக் கல்வி உரிமை சட்டம் தொடர்பான திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்கவில்லை.
மேலும், 2025- 2026 கல்வியாண்டிற்கான முழு நிதிசெலவையும் மாநில அரசே அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒன்றிய அரசும் இந்த செலவுகளுக்கு பங்களிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. குறிப்பாக 2021-2022 மற்றும் 2022- 2023 கல்வி ஆண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60சதவீத பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரையில் ஒன்றிய அரசு வழங்கவில்லை. எனவே அந்த கல்வியாண்டுகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் கேவியட் மனுதாரர் ஈஸ்வரன் ஆகியோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்தனர்.