கட்டாய கல்வி உரிமை சட்டம் விவகாரம்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை ரூ.153 கோடி வரை தமிழ்நாடு அரசு கல்விக்காக செலவு செய்துள்ளது. ஒன்றிய அரசு கல்வி நிதியை விடுவிக்காமல் உள்ளது.
எனவே அதனை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் இதை கட்டாயமாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சிக் ஷா திட்டத்திலிருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை குறைக்கவில்லை என்பதை காரணமாக கூறாமல் சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கான நிதியை மாநில அரசே வழங்கவேண்டும். குறிப்பாக பிரிவு 17ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தில் நிறைவேற்றுவது ஒன்றிய மற்றும் மாநில அரசுடைய பொது பொறுப்பாகும் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கட்டாய கல்வித்திட்டம் தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. மாநில அரசு எப்படி கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பான சட்டத்தை செயல்படுத்த முடியும் என்று தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பி எழுப்பியது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், ஒன்றிய அரசு மற்றும் எதிர்மனுதாரர் ஈஸ்வரன் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது.