அரிசி முதல் அவல் வரை விற்பனை...
பிடி உணவாக இருந்தாலும் நஞ்சில்லாத உணவே மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருபவர்தான் பசுபதி. அதுமட்டுமன்றி, தான் விளைவித்த பொருட்களை அரிசியாக, சத்து மாவாக, அவலாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருகிறார். இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டி விற்பனை என தனக்குத் தெரிந்த விவசாயத்தை மனநிறைவோடு செய்துவரும் பசுபதியை சந்திக்கச் சென்றிருந்தோம். ‘‘நோயில்லா வாழ்விற்கு ஆரோக்கியமான உணவுதான் அவசியம். எனவே, நான் நம்மாழ்வார் பாதையில் பயணிக்கிறேன்'' என தனது பேச்சை எளிமையாகத் தொடங்கினார் பசுபதி. ‘‘தஞ்சை மாவட்டம் மாரநேரி கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். கடந்த 25 ஆண்டுகளாக நஞ்சில்லாத பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே சாகுபடி செய்து வருகிறேன். எனது மகன் திலீபன் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு 4 ஆண்டுகள் வெளியில் வேலை பார்த்து வருவதோடு, விவசாயத்தில் எனக்குத் துணையாகவும் இருக்கிறார்.
எனது வயலில் பல வகையான பாரம்பரிய ரகங்களை பயிரிட்டு வருகிறேன். நெல் சாகுபடி செய்வதற்கு முன்பாக கோடை காலத்தில் என் வயலில் தக்கைப்பூண்டு, நவதானியங்களை விதைப்பேன். பின்னர், அவை நன்கு வளர்ந்து வந்த பின்னர் அவற்றை அப்படியே வயலில் மடக்கி உழுவேன். இப்படி செய்வதன் மூலம் மண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதோடு தென்னை நார் மட்டைகளையும் மக்க செய்து வயலில் இடுவதால் நுண்ணுயிர்கள் பல்கி பெருகும். இதனால் நெல் பயிர்கள் அதிக தூர் கட்டும்.நாற்று நட்ட 3ம் நாள் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சாணம், 10 லிட்டர் கோமியம், 1 கிலோ வெல்லம், சத்துக்கள் நிறைந்த பழுத்த பப்பாளி அல்லது வாழைப்பழம் ஆகியவற்றை நன்கு கரைத்து 2 நாட்கள் வைத்திருந்து 20 லிட்டருக்கு 100 லிட்டர் தண்ணீர் கலந்து மடையில் தண்ணீர் திறக்கும் போது அதில் ஊற்றுவேன். இதனால் தூர்கள் அதிகம் ஏற்பட்டு மகசூலும் அதிகரிக்கும்.
இதேபோல் 20ம் நாளில் 5 கிலோ கடலை புண்ணாக்கு, 10 கிலோ தேங்காய் புண்ணாக்கு, 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு, கொட்டமுத்து, ஆட்டு எரு, பஞ்ச கவ்யம் 5 லிட்டர் சேர்த்து தெளிப்பேன். இடையில் ஒருமுறை களை எடுத்தால் போதும். பின்னர் 35ம் நாளில் பயிர் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யம், மீன் அமிலத்தை கலந்து பயிர்கள் மீது நன்கு படும் படி தெளிக்க வேண்டும். பின்னர் 45ம் நாளில் பயிர்கள் நன்கு வளர்ந்து இருக்கும் நிலையில் மீன் அமிலத்தை 2 லிட்டர்அளவிற்கு எடுத்து தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். இதனால் நெல் மணிகள் அதிகம் பிடித்து வளரும்.இயற்கை முறையில் விவசாயம் செய்யும் போது எரு அடித்தல், நாற்று நடுதல், களை பறித்தல் போன்றவற்றிற்கு செலவாக ரூ.15 ஆயிரம் ஆகிறது. விதை நெல்லை மதிப்புக்கூட்டி அரிசி, அவல், சத்து மாவாக விற்பனை செய்து வருவதால் எனக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. தொடர்ந்து 25 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்வதால் எனக்கு தமிழகமெங்கும் வாடிக்கையாளர்கள் உண்டு. தமிழ்நாடு மட்டுமன்றி பெங்களூரு மற்றும் வெளிநாடுகளிலும் கூட எனக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
தற்போது, இருபோகம் மட்டுமே சாகுபடி செய்து வருகிறேன். இலவச மின் இணைப்பு கிடைத்தால் பம்ப் செட் அமைத்து மூன்று போகம் செய்யலாம். இந்த நெல் சாகுபடி போக, தேக்கு மரங்கள், தென்னை மரங்கள், பூவன், கற்பூர வல்லி, சந்தன மரம், செம்மரம் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். இவை அனைத்தும் இயற்கைமுறை சாகுபடி என்பதால் நன்கு வளர்ந்து பயன் தருகிறது. இவற்றின் இலைகளை சாகுபடிக்கு முன்பு வயலில் கொட்டி மக்கி போக செய்து உழும்போது இன்னும் அதிக விளைச்சல் கிடைக்கிறது. பஞ்ச கவ்யம் தயாரிக்க கோமியம் முக்கியம், இதற்காக 10 நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். எங்கள் தோப்பில் ஆச்சரியப்படும் வகையில் 2 விஷயங்கள் உள்ளது. முழுமையாக பட்டுப் போன பலா மரம் மீன் அமிலத்தை ஊற்றியதால் தற்போது நன்கு வளர்ந்து நிறைய பலாப்பழங்கள் காய்த்தன. அதை விட அடுத்தது 2 ஆப்பிள் மரங்கள் நன்கு வளர்ந்து வருகிறது'' என ஆச்சர்யம் பொங்க பேசி முடித்தார் விவசாயி பசுபதி.
தொடர்புக்கு:
பசுபதி: 96007 19525.
விதையாக, அரிசியாக, அவலாக, சத்து மாவாக என தனது வயலில் விளையும் பயிர்களை எல்லா விதத்திலும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறேன் என்கிறார் பசுபதி. மேலும், உற்பத்தி செலவெனப் பார்த்தால், 2 போகத்திற்கும் சேர்த்து 30 முதல் 40 ஆயிரம் ஆகிறது. சுமார் எட்டு ஏக்கரில் பாரம்பரிய அரிசி பயிரிட்டு வருவதால் செலவெல்லாம் போக ஏக்கருக்கு சராசரியாக ஐம்பது ஆயிரம் வரை லாபமாக கிடைக்கிறது என்கிறார் பசுபதி. மேலும், விவசாயிகள் குழு ஒன்றை அமைத்து பலரையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றியுள்ளதாகவும், தனது வயலுக்கு வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் பயிற்சிக்காக வந்து செல்கின்றனர் எனவும் கூறுகிறார்.