ஆய்வுக் கூட்டத்திற்கு வராத 5 அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளம் ‘கட்’: உ.பி அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
கோரக்பூர்: கோரக்பூரில் மக்கள் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத 5 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் இரவு தங்கிய பிறகு, நேற்று காலை நடைபெற்ற ‘ஜனதா தர்ஷன்’ நிகழ்ச்சியில் மக்களுடன் கலந்துரையாடினார். சுமார் 200 பேரின் குறைகளைக் கேட்டறிந்த அவர், அவற்றின் மீது உடனடியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத 5 அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோட்ட ஆணையர் அனில் திங்க்ரா, கூட்டத்தில் கலந்து கொள்ளாத சி அண்ட் டிஎஸ் யூனிட் திட்ட மேலாளர்கள், நிர்வாகப் பொறியாளர் மற்றும் பிஆர்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகிய ஐந்து அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரை செய்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை, உத்தரபிரதேச அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.