தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டம்
*அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
தூத்துக்குடி : அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும்.
3 ஆண்டுக்கு உட்பட்ட 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிக முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்துக்கு இரு முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள உரிய காலஅவகாசம், கூடுதல் தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும்.
சான்றிதழ் வழங்கும் பணி மற்றும் உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு சிறப்பு திட்டப்பணிகளை மேற்கொள்ள அனைத்து தாலுகாவிலும் புதிய துணைதாசில்தார் பணியிடம் உருவாக்க வேண்டும். அரசுத் துறைகளில் கருணை அடிப்படை பணி நியமனத்துக்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை ரத்துசெய்வதோடு மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
வருவாய்த்துறை அலுவலர்கள், விஏஓக்கள், கிராம உதவியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் நேற்று இரவு 8 மணி வரை நடந்த இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் ஞானராஜ், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஷ் கண்ணன், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் குமாரலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் வெங்கடேஷ், மாவட்டத் தலைவர் பிரபு சிறப்புரை ஆற்றினர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
விளாத்திகுளம்: இதேபோல் விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பாக நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு விளாத்திகுளம் வட்டத் தலைவர் மலையாண்டி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட நிர்வாகிகள் குப்புராஜ், சண்முக ராமநாதன், நில அளவை துறை சங்க நிர்வாகி காட்டுபாவா கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.