சொத்து எழுதிவாங்கிக்கொண்டு கைவிட்ட வாரிசுகள் 4 முதியோரின் பலகோடி ரூபாய் சொத்துக்கள் திரும்ப ஒப்படைப்பு
*பத்திரப்பதிவை ரத்து செய்து திருப்பத்தூர் கலெக்டர் அதிரடி
திருப்பத்தூர் :திருப்பத்தூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் சொத்துக்களை எழுதிவாங்கிக்கொண்டு கைவிட்ட வாரிசுகளின் பத்திரப்பதிவை ரத்து செய்து 4 முதியோர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு உதயமானது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் மாதனூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளது.
புதிய மாவட்டமாக உதயமானது முதல் இதுவரை 4 கலெக்டர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது 5வது கலெக்டராக சிவசவுந்திரவல்லி உள்ளார்.
இவர் பொறுப்பேற்ற பின்னர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை கூடுதலாக சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது துரிதநடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக வாராந்திர குறைதீர்வு கூட்டத்தின்போது முதியோர் பலர் மனுக்கள் அளிக்கின்றனர். அவற்றில் பெற்ற பிள்ளைகள் தங்கள் தங்களிடம் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு தங்களை உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் கைவிட்டதாகவும், சிலர் தங்களை காப்பகத்தில் சேர்த்து விட்டதாகவும் மனுக்கள் அளித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களை பொருத்தவரை நடக்க முடியாமல் தள்ளாடியபடியும், சக்கர நாற்காலியிலும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள் மனுக்கள் அளித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் தங்களுக்கு ஒருவேளை உணவு கூட பிள்ளைகள் தருவதில்லை. இதனால் கோயில் வாசலில் பிச்சை எடுப்பதாகவும், அன்னதானம் வழங்கும் இடங்களுக்கு சென்று உணவு சாப்பிடுவதாகவும் கதறிஅழுதபடி மனுக்கள் கொடுத்தனர்.
இதுதொடர்பாக மாவட்டத்தின் முதல்பெண் கலெக்டரான சிவசவுந்திரவல்லி, துரித நடவடிக்கைகளில் களம் இறங்கினார். அதன்பேரில் கடந்த 3 மாதங்களில் வாரிசுகளால் கைவிடப்பட்ட 4 முதியோரின் நிலம், வீடு, கடை உள்ளிட்ட சொத்துக்களை அவர்களது வாரிசுதாரர்களிடம் இருந்து மீட்டு மீண்டும் அந்தந்த முதியோரிடம் ஒப்படைத்துள்ளார். இது மாவட்ட அளவில் முதன்முறையாக செயல்படுத்தப்படும் நடவடிக்கை ஆகும். இதற்கு பலதரப்பினரிடம் இருந்து பாராட்டு குவிகிறது.
இதுகுறித்து கலெக்டர் சிவசவுந்திரவல்லி நேற்று கூறியதாவது : வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது சொந்த பிள்ளைகள் சொத்து எழுதி வாங்கிக்கொண்டு பின்னர் கைவிடுகின்றனர்.
அரசு சட்டத்தில் முதியோர்களை பராமரிக்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. தற்போது மூத்த குடிமகன் (சீனியர் சிட்டிசன்) சட்டத்தில் மனு அளித்தவுடன் அதுதொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் அவர்களது பிள்ளைகளையும், முதியோர்களையும் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அதில் பெற்றோர்களை இனி, உரியமுறையில் உணவளித்து அவர்களது வாழ்நாள் முழுவதும் பராமரிப்போம் என்ற உறுதிமொழி பத்திரத்தை எழுதி கொடுத்த பின்னரே சில நாட்கள் அதனை கண்காணித்து உறுதிசெய்கிறோம்.
குறிப்பாக திடீரென சம்பந்தப்பட்ட பெற்றோரின் வீட்டுக்கு சென்று அவர்களது வாரிசுகள் உரிய முறையில் பராமரிக்கிறார்களா? என ஆய்வு செய்கிறோம். இந்த உடன்படிக்கை படி நடந்துகொண்டால் சொத்து பத்திரம் ரத்து செய்யப்படமாட்டாது.
ஒருவேளை சமரச பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் மூத்த குடிமகன்கள் சட்டத்தின்படி மாவட்ட நிர்வாகம் என்ற அடிப்படையில் பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி அதன்மூலம் அவர்களது சொத்துகளை மீண்டும் பெற்றோரிடம் சேர்க்க சட்டத்தில் இடம் உள்ளது.
கடந்த 3 மாதங்களில் 4 பெற்றோர்கள் எழுதி கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பத்திரப்பதிவு ரத்து செய்து மீண்டும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
எங்கள் மகள் போன்றவர் கலெக்டர்: முதியோர் நெகிழ்ச்சி
இதுதொடர்பாக சொத்துக்களை திரும்ப பெற்ற 4 பெற்றோர்களிடம் கேட்டபோது, `எங்களை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என நம்பிதான், எங்கள் சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிகொடுத்தோம். ஆனால் அவர்கள் சொத்து பெற்றுக்கொண்டு உதாசீனப்படுத்தி விரட்டினார்கள். குறிப்பாக மூத்த மகன் வீட்டுக்கு சென்றால், இளையமகன் வீட்டுக்கு செல் என்பதும், அல்லது இருவரும் விரட்டுவதுமாகவே இருந்தனர்.
ஒருவேளை சாப்பாடு போடவும் விரும்பாமல் எங்களை பாராமாக நினைக்க ஆரம்பித்தார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காண திருப்பத்தூர் மாவட்ட முதல் ெபண் கலெக்டர் சிவசவுந்திரவல்லியிடம் முறையிட்டோம். அதன்பேரில் அவர் விசாரித்து பத்திரப்பதிவை ரத்து செய்து மீண்டும் சொத்துக்களை எங்களுக்கே திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்தார். நாங்கள் பெற்றெடுக்காத பிள்ளைபோல் மாவட்டத்தின் பெண் கலெக்டர் துரிதமுறையில் செயல்பட்டு எங்கள் கண்ணீரை துடைத்தார். இவ்வாறு நெகிழ்ச்சியுடன் கூறினர்.