ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய தடை: அரசாணை வெளியீடு
சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் நடைமுறை தவிர்க்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்டிருந்தார். அரசு ஊழியர்கள் தவறு செய்யும் நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்படுகிறது. சில சமயங்களில் தவறு செய்பவர் மீதான விசாரணை நீண்டகாலம் செல்லும்போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்காக அவர் தற்காலிக இடைநீக்கத்தில் (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.
விசாரணை, நடவடிக்கை ஆகியவற்றுக்கு உரிய கால அளவை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வு பெறுவதைக் கருத்தில்கொண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கொடுத்து, இயற்கை நியதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும். ஓய்வு பெறுவதற்கு முன்னரே துறை ரீதியான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க இயலாத பட்சத்தில், நடவடிக்கையில் நிர்வாக ரீதியான தாமதத்தைக் கருத்தில்கொண்டு அந்த அரசு ஊழியரை ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிந்த பிறகே பணப்பலன்களை பெற முடியும். மேலும், இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை, குற்ற வழக்குகளுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.