ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் மாஜி டிஜிபி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: ஓய்வுபெற்ற தலைமை செயலர், மாஜி டிஜிபி வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தவெக கூட்ட அசம்பாவிதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில், மிரட்டலானது வெறும் புரளி எனவும் தெரிய வருகிறது.
இருப்பினும் வெடிகுண்டு மிரட்டலை, அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவ்வளவுதான்.. இதனால் மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், நேற்று தமிழக முன்னாள் டிஜிபி நட்ராஜ்,
ஆடிட்டர் குருமூர்த்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, நீலாங்கரை அடுத்த அக்கரையில் உள்ள இஸ்கான் கோவில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வீடு, எழுத்தாளர் சாரு நிவேதிதா வீடு, துக்ளக் அலுவலகம், பெரியார் சமாதி உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் 45 நிமிடங்கள் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என தெரிய வந்தது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு உள்பட பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.