நவ.23ஆம் தேதி கடைசிநாள் இன்றுடன் ஓய்வு பெறுகிறார் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்: திங்கட்கிழமை சூர்யாகாந்த் பதவி ஏற்பு
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அன்று ஞாயிற்றுக்கிழமை. எனவே உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாயின் கடைசி பணி நாள் இன்று ஆகும். இதையடுத்து நேற்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம் ஏற்பாடு செய்த பிரியாவிடை விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் நீதித்துறை எனக்கு நிறைய கொடுத்துள்ளது. நான் புத்த மதத்தைப் பின்பற்றுகிறேன், ஆனால் எந்த மதப் படிப்பிலும் எனக்கு அதிக ஆழம் இல்லை. நான் உண்மையிலேயே மதச்சார்பற்றவன், இந்து மதம், சீக்கியம், இஸ்லாம், கிறிஸ்தவம், எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் இதை என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன். டாக்டர் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தால் மட்டுமே தற்போதைய நிலையை அடைய முடிந்தது.
இல்லையெனில், தரையில் அமர்ந்திருக்கும் நகராட்சிப் பள்ளியில் படிக்கும் எந்தப் பையனும் இதைப் பற்றி கனவு காண முடியாது என்று நான் நினைக்கிறேன். இந்திய அரசியலமைப்பின் நான்கு அடிப்படைக் கற்களான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின்படி வாழ முயற்சித்தேன். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை மையமாகக் கொண்ட நீதிமன்றமாக இருக்கக்கூடாது, மாறாக அனைத்து நீதிபதிகளின் நீதிமன்றமாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஒரு மிகச் சிறந்த நிறுவனம்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் இணைந்து செயல்படாவிட்டால், நீதிமன்றம் செயல்பட முடியாது. வழக்கறிஞர் சங்கத்தின் பிரச்னைகள் குறித்து எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பேசினார். பி.ஆர்.கவாய் ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக வரும் திங்கட்கிழமை சூர்யாகாந்த் பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் ஜனாதிபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.