ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தலைமையிலான 8வது சம்பள கமிஷன் விதிமுறைகளுக்கு ஒப்புதல்: ஒன்றிய அமைச்சரவையில் முடிவு
புதுடெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8வது சம்பள கமிஷனின் பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் திருத்தங்களை மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கும் அமைப்பே சம்பள கமிஷன். இது, பொருளாதார நிலைமை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள அளவுகளை திருத்துவதற்காக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அமைக்கப்படுகிறது. தற்போதைய 7வது சம்பள கமிஷன் கடந்த 2014 பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி வரை செலுப்படுத்தப்படும்.
எனவே, அடுத்த 10 ஆண்டுகளுக்கான 8வது சம்பள கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என கடந்த ஜனவரியில் ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கான செயல்முறையை தொடங்கும் விதமாக, 8வது சம்பள கமிஷனின் பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், 8வது சம்பள கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், பகுதி நேர உறுப்பினராக பெங்களூர் ஐஐஎம் பேராசிரியர் புலக் கோஷ், உறுப்பினர் செயலாளராக ஒன்றிய பெட்ரோலிய துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமனத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில், தேசாய் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவராக உள்ளார். அரசின் பல்வேறு முக்கிய குழுக்களுக்கு அவர் தலைமை தாங்கி உள்ளார்.
தற்போது விதிமுறைகள் மற்றும் ஆணைய உறுப்பினர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 8வது சம்பள கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை விரைவில் சமர்பிக்கும். இதன் அடிப்படையில், 8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் செயலாக்கம் 01.01.2026 முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அடுத்த 18 மாதத்திற்குள் இறுதி அறிக்கை சமர்பிக்கப்படும். 8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என்று ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* உர மானியம் ரூ.37,952 கோடி
ஒன்றிய அமைச்சரவையில், நடப்பு 2025-26 ரபி பருவத்திற்கான பாஸ்பரஸ் மற்றும் சல்பர் உரங்களுக்கான மானியத்தை ரூ.37,952 கோடியாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. பாஸ்பேட்டுக்கான மானியம் கிலோவுக்கு ரூ.43.60ல் இருந்து ரூ.47.96 ஆகவும், சல்பர் உரங்களுக்கான மானியம் கிலோவிற்கு ரூ.1.77ல் இருந்து ரூ.2.87 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நைட்ரஜன் மற்றும் பொட்டாஷிற்கான மானிய விகிதம் முறையே கிலோவிற்கு ரூ.43.02 மற்றும் ரூ.2.38 ஆக மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.