ரெஸ்டோ பார் கொலையால் ஆடிப்போயிருக்கும் ஆளும் தரப்பு பற்றி சொல்கிறார் wiki யானந்தா
வாக்கிங் முடித்துவிட்டு, அப்படியே ஓட்டலுக்கு சென்றனர் பீட்டர் மாமாவும், விக்கியானந்தாவும். தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, வழக்கப்படி தனது அரசியல் கேள்விகளை தொடுக்கத் தொடங்கினார் பீட்டர் மாமா. ‘‘தேர்தலுக்கு முன்னதாக மாற்று கட்சிக்கு தாவவில்லை என்றால் கட்டிய வேஷ்டி கூட மிஞ்சாது என குக்கர், தேனிக்காரர் அணி நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாமே..’’ என்றார்.
அதற்குள் சப்ளையர் தோசையை கொண்டுவந்து வைத்தார். சாப்பிட்டுக்கொண்டே பீட்டர் மாமாவின் கேள்விக்கு பதிலை சொல்லத் தொடங்கினார் விக்கியானந்தா. ‘‘மன்னர் மாவட்டத்தில் குக்கர் கட்சி மற்றும் தேனிக்காரர் அணியில் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நிர்வாகிகளுக்கு தலைமையிடத்தில் இருந்து எந்தவித உதவியும் செய்வதில்லையாம்.. முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தால் கூட அவர்களுக்கு தெரிவிப்பது இல்லையாம்.. குக்கர் தலைமையானவரும், தேனிக்காரரும் சேர்ந்து இலை கட்சியை எப்படியாவது மீட்பார்கள் என்றுதான் சேலத்துக்காரரிடம் இருந்து வெளியேறினோம்.. ஆனால் தலைமையானவர்கள், தாமரைக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்காங்க.. ஆனால் தாமரை மேலிட தலைவர்கள் இவங்க இருவரையும் கண்டுகொள்வதே இல்லை..
இனி தலைமையானவர்களை நம்பி இருந்தால் நம்ம எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். கட்டிய வேஷ்டி கூட மிஞ்சாது.. இதனால் தேர்தலுக்கு முன்னதாக நல்ல முடிவு எடுத்து விடவேண்டும் என அவர்களுக்குள் பேசிக்கிட்டாங்களாம்.. தேர்தலுக்கு முன்னதாக எப்படியாவது மாற்றுக் கட்சிக்குகூட தாவி விடலாம் என தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசிருக்காங்க.. தற்போது இந்த டாப்பிக்தான் குக்கர் கட்சி மற்றும் தேனிக்காரர் அணியில் பரவலாக ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
விக்கி முடித்ததும், அதேவேகத்தில் அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘நிறுத்தி விட்டு திரும்பி பார்க்கிறதுக்குள்ள பைக்கை லவட்டிக்கிட்டு போயிடுறாங்களாமே எங்க..’’ என்று கேட்டார்.
‘‘குயின் பேட்டை மாவட்டத்துல மலைக்கோயில் அமைந்துள்ள நகரத்துல பைக் திருட்டு தொடர்கதையாக இருக்குதாம்.. கடந்த 2 மாசத்துல மட்டும் கோயில் நகரத்துல ஏகப்பட்ட பைக்குகளை மர்ம ஆசாமிகள் திருடிட்டு போயிருக்காங்க.. பைக்க நிறுத்திட்டு திரும்பி பார்க்குறதுக்குள்ள பைக் மாயமாகிடுதாம்.. பைக்க பறிகொடுத்தவங்க காக்கிகள் நிலையத்துல புகார் கொடுக்க போறாங்களாம்.. ஆனா, காக்கிகள் நிலையத்துல புகார் கொடுத்தால் வாங்கி வெச்சிக்கிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்குறதில்லையாம்.. சம்திங் கொடுத்தால்தான் வழக்கு பதிவு நடக்குதாம்.. இல்லாட்டி சிஎஸ்ஆர் கூட கொடுக்காம ஜனங்கள அலையவிடுறாங்களாம்.. கையும் களவுமாக பிடிச்சு கொடுத்தாலும் நடவடிக்கை இல்லைன்னு ஜனங்க மத்தியில இருந்து புகாரும் புலம்பலும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியிருக்குது.. குயின்பேட்டை மட்டுமில்லாம, வெயிலூர் நகரத்துலயும் பைக் திருட்டு சம்பவம் அதிகமாக நடக்குது.. புகார் மேல எந்த நடவடிக்கையும் இல்லைன்னு ஜனங்க புலம்பி வர்றாங்க.. புதுசா வந்திருக்குற குயின்பேட்டை, வெயிலூர் மாவட்ட காக்கிகள் சாட்டைய சுழற்றினால்தான் அப்பாவி மக்களோட பைக் மட்டுமில்லாம, மொத்த உடைமைகளும் பாதுகாப்பாக இருக்கும்னு பாதிக்கப்பட்ட ஜனங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பழம் கனிந்த நிலையில் ரெஸ்டோ பார் கொலையால் கடும் அப்செட்டில் இருக்கிறதாமே புல்லட்சாமி தரப்பு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் சமீபகாலமாக பல அடாவடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறதாம்.. பர்த்டே பார்ட்டிக்காக புதுச்சேரிக்கு வந்திருந்த தமிழக இளசுகள் ரெஸ்ட்ரோ பாரில் மிட்நைட்டில் லூட்டி அடிக்க ஊழியர்களுடன் கைகலப்பு ஏற்பட்டு கொலையில் முடிந்திருக்கு.. பட்டதாரி வாலிபரின் உயிர் பறிபோக, மற்றொருவரோ ஆஸ்பத்திரியில் சீரியஸாக உள்ளாராம்.. ஏற்கனவே மதுபான ஆலை, புதிய ரெஸ்ட்ரோக்களுக்கு அனுமதி கேட்டு பவர்புல் நிர்வாகி மேஜையில் மாதக்கணக்கில் கோப்பு கிடப்பில் கிடக்க, தற்போதுதான் பழம் கனிந்திருந்ததாம்.. திடீரென இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேற ஆளும் தரப்போ அப்செட்டில் மூழ்கி உள்ளதாம்.. ரெஸ்ட்ேரா மாமூல்கள் தவறாமல் செல்வதால் காக்கிகளும் அட்டூழியங்களை காணாமல் இருந்த நிலையில் இக்கொலையின் முழு உண்மையை எதிர்க்கட்சிகள் வெளிச்சம்போட்டு வருகிறார்களாம்.. ஆனால் எப்படியாவது உண்மையை மூடிமறைக்க உள்ளூர் காக்கிகள் முனைப்பு காட்டுவதால் சிபிஐக்கு வழக்கை மாற்றியே தீர வேண்டுமென போர்க்கொடி எழுந்துள்ளதாம்.. நியாயம் கிடைக்காவிடில் நீதிமன்ற வாசல்படியை நாடுவதை தவிர வேறுவழியில்லை என கை தரப்பு எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளதாம்.. இதனால் ஆளும்தரப்பு ஆடிப்போய் இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் சுற்றுப்பயணத்தால மாவட்டந்தோறும் வசூல் வேட்டையில இறங்கியிருக்கும் குரூப் குஷியில இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சேலத்துக்காரரு தமிழ்நாட்டுல சுற்றுப்பயணத்தை தொடங்கியிருப்பதால இலை பார்ட்டியில இருக்குற ஒரு குரூப் குஷியாகிட்டாங்களாம்.. இப்படி குஷியான குரூப் மாவட்டங்கள் தோறும் இருக்குறாங்களாம்.. காரணம், சேலத்துக்காரர் வருகைய சொல்லி, சொல்லியே வசூல் வேட்டைய தீவிரமா தொடங்கிட்டாங்களாம்.. அந்த வசூல் வேட்டையில பெருசா ஒரு தொகை சேர்த்துடலாம்னு பிளான் போட்டிருக்காங்களாம்.. இதனால இலை கட்சியில எந்த அணி நிர்வாகியையும் விட்டு வைக்கலையாம்.. கட்சிக்கு அப்பாற்பட்ட வசதிபடைத்த ஆதரவாளர்களையும் விட்டு வைக்காம தீவிர வேட்டை நடக்குதாம்.. இப்படி நடத்துன வேட்டையில கிரிவலம் சென்ட்ரல் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆறு அணி தொகுதியில வாய்தகராறு முற்றி, மோதல் போக்கே ஏற்பட்டுச்சாம்.. ஜெ.. இருக்கும்போது, யாரு வேட்பாளர்னு தெரியாம இருக்கும்.. யாருவேணும்னாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் அவங்களுக்கு ஜாக்பாட் அடிச்சு எம்எல்ஏகூட ஆகலாம்னு ஆசையில இருப்பாங்க.. ஆனா, இப்ப வேட்பாளர் அறிவிக்குறதுக்கு முன்னாடியே, நான் தான் வேட்பாளர்னு மா.செக்கள் சொல்லி வர்றாங்களாம்.. வேட்பாளர்னு சொல்லி வசூல் நடத்துறதால, உங்களுக்கு ஏன் நாங்க செலவு செய்யணும், போன பத்து வருஷமாக சம்பாதிச்சிட்டு, இப்பவும் எங்ககிட்டயே கேட்குறீங்களான்னு, ரத்தத்தின் ரத்தங்கள் கொதிச்சு போயிருக்காங்களாம்.. ஸ்டேட் முழுசுமாகவே இந்த ரத்தங்களோட கொதிப்பு இருந்துகிட்டே இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பேச்சு சுவாரசியத்துல சரியா சாப்பிடாம விட்டீங்க.. முதல்ல அந்த தோசையையும் முடிங்க. காபி குடிச்சு கிளம்புவோம்’’ என விக்கியானந்தாவிடம் சொல்லிவிட்டு சிரித்தார் பீட்டர் மாமா.