தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக ஆட்சி மீண்டும் அமைய பாடுபடுவோம்: திருச்சி மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருச்சி: திருச்சியில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ (எம்.பி.) மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது;

Advertisement

தீர்மானம் 1:

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியோடு 32 ஆவது ஆண்டில் இலட்சியப் பயணத்தைத் தொடரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக சமரசம் இன்றி போராடி வருகிறது. மறுமலர்ச்சி திமுக தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் காவல் அரணாகத் திகழ்கிறது. திராவிட இயக்கத்திற்கு எதிரான பகை சக்திகள் தமிழ்நாட்டை கைப்பற்ற முனைந்து வரும் சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் -3 ஆம் தேதி உயர்நிலைக் குழுவில் எடுத்த முடிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக மறுமலர்ச்சி திமுக உறுதியாக இருக்கிறது. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழக மக்களின் பேராதரவோடு வெற்றிவாகை சூடிட மறுமலர்ச்சி திமுக பணியாற்றும் என்று கழக மாநாடு பிரகடனம் செய்கிறது.

தீர்மானம் 2:

பீகார் மாநிலத்தில் நடந்து வந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த ஜூலை 26ஆம் தேதி நிறைவு பெற்றது. அதன் பின்னர் பீகார் மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 65 இலட்சம் பேரின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன. பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில், எந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ, அங்கு அந்த வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 6.5 இலட்சம் பேர் தமிழகத்தில் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்கள். தமிழகத்திலும் விரைவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்க உள்ளது.

அப்போது தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தோர் தங்களது பெயர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிப்பார்கள். இவர்களது மனு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு நடந்தால் தமிழக வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். தமிழ் நாட்டைக் குறி வைத்து இருக்கும் பாஜக ,வாக்காளர் பட்டியலில் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்து, தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சிப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு சவால் விடும் பாஜக-வின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும். இல்லையெனில் இன்று பீகாரில் நடப்பது நாளை மற்ற மாநிலங்களுக்கும் நடக்கும் என்பதை மறுமலர்ச்சி திமுக எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் 3:

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் தருவாயில், அரசியலமைப்பு (130- ஆவது திருத்த) மசோதா 2025 -ஐ உள்துறை அமைச்சர்அமித்ஷா கொண்டு வந்தார். அதில், ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரின் பதவியையோ, ஒரு மாநில முதல்வரின் பதவியையோ பறிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், பதவியை பறிக்கலாம். ஆனால் விசாரணை காலத்திலேயே ஒரு மாதம் சிறையில் இருந்தால் பதவியை பறிக்க வேண்டும் என்று பாசிச சிந்தனையோடு மோடி அரசு கொண்டு வந்திருக்கிற இந்த சட்ட திருத்தம் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கான ஒரு கருவியாக பயன்படும்.

எதிர்க்கட்சிகளை நிலைகுலையச் செய்ய சிறந்த வழி, ஒருதலைபட்சமாகவே செயல்படும் மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சி முதல்வர்களை கைது செய்வதாகும். தேர்தலில் அவர்களை தோற்கடிக்க முடியாமல் போனாலும் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் அவர்களை அப்புறப்படுத்திவிடலாம் என்பது பாஜகவின் திட்டம். இச்சட்டத்தின் கீழ் ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் வழங்கப்படும் அதிகாரம் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானதாக இருக்கிறது. இந்த ஜனநாயக படுகொலையைக் கடுமையாக எதிர்ப்பதுடன் இச் சட்டத் திருத்தம் திரும்ப பெறப்பட வேண்டும் என்று கழக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ. 45 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 68 சதவீத பின்னலாடைகள் திருப்பூரில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏற்றுமதியில் சுமார் 30 சதவீத பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு 25 சதவீத வரி இருந்து வந்த நிலையில், தற்போது அது 50 சதவீத வரியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்க வர்த்தகர்களிடம் இருந்து ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டரின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை பழைய விலையில் விற்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டதால், அந்த ஆடைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பைச் சந்திக்கும் நிலைக்கு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தள்ளப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு, பின்னலாடைத் துறையில் நமக்கு போட்டியாக உள்ள சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இதனால், ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி கடுமையான சரிவைச் சந்திக்கும்.

திருப்பூரை போலவே ஜவுளித் துறையின் கேந்திரமாக விளங்கும் கோவை, ஈரோடு, கரூர் ,விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாட்டை அதிகம் பாதிக்கிறது. தமிழ்நாடு அரசு தன்னால் இயன்றதைச் செய்து கொண்டிருந்தாலும், ஒரு மாநில அரசால் செய்யக் கூடியவற்றுக்கு வரம்புகள் உள்ளன. எனவே, ஒன்றிய அரசு தன் பங்கை உணர்ந்து, குறிப்பாக துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவின் ஏற்றுமதித் துறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையான கொள்கை வடிவமைப்பை முன்வைக்க வேண்டுமென மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

கீழடியில் நடந்த முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம்? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது, கடந்த 2024 டிசம்பர் மாதம் இதற்கு பதிலளித்துப் பேசிய ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் “2015, 2016 இல் நடைபெற்ற கீழடி முதல், 2-ஆம் கட்ட அகழாய்வு - அறிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களைக் கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும்” என்று தெரிவித்திருந்தார். கீழடியில் 1,2,3 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2-ஆம் கட்ட முடிவுகள் வெளியாகவில்லை. முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் கடந்த 2024, பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 14 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மறுசீரமைத்து சமர்ப்பிக்குமாறு, அப்பணியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) உத்தரவிட்டது. இது தொடர்பான திருத்தங்களை மேற்கொண்டு, அறிக்கையை “மேலும் நம்பகத்தன்மை” கொண்டதாக மாற்றும்படி கோரியது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடியில் பண்டைய நாகரிகத்தின் தடயங்களை வெளிக்கொணர்ந்ததில் முக்கியப் பங்காற்றியவர். அவர் தயாரித்த 982 பக்க அறிக்கை, கீழடி அகழாய்வு தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிமக்கரி (Charcoal) மாதிரிகளின் கார்பன் டேட்டிங் (Carbon dating) மூலம், அந்தப் பகுதி கி.மு. 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாக இருந்திருக்கலாம் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பல கலைப்பொருட்கள், தமிழகத்தில் ஒரு நகர்ப்புற நாகரிகத்தின் இருப்பை சுட்டிக்காட்டுகின்றன. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது என்றும், தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு, கி.மு 800 முதல் கி.பி.500 என உறுதி செய்யப்பட்ட பிறகே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே திருத்தம் தேவையில்லை என்றும் அவரது கடிதத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது என்றும் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் நடவடிக்கை கீழடி அகழாய்வு முடிவுகளை இருட்டடிப்பு செய்து வேதகால நாகரிகத்தை தூக்கி பிடிக்கும் கூட்டத்தின் உள்நோக்கத்தை புலப்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுந்தது.

சென்னையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன” என்று கூறியிருக்கிறார். கீழடி தமிழ் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரீகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்; ஆரியர்கள் தான் பூர்வகுடிகள்; வேத இதிகாச புராணங்கள் தான் இந்தியாவின் வரலாறு என நிறுவத் துடிப்பது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக கீழடி ஆய்வு முடிவுகள் வெயிடப்பட்டு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என கழக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:

2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கான வரி வருவாய் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு வருடமும் 14 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஒன்றிய அரசு கூறியது. அப்படி அதிகரிக்காத பட்சத்தில், அந்த இடைவெளியை ஒன்றிய அரசு இழப்பீட்டின் மூலம் நிறைவுசெய்யும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. அதன்படி, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆடம்பரப் பொருட்களுக்கும், மதுபானங்கள், சிகரெட் போன்ற பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. தவிர கூடுதலாக இழப்பீட்டு மேல்வரி விதிக்கப்பட்டு, அந்தத் தொகையிலிருந்து மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், 2020 - 21 காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவியதால் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக போடப்பட்ட இழப்பீட்டு மேல்வரியிலிருந்து வசூலான தொகை, இழப்பீட்டை வழங்கப் போதுமானதாக இல்லை. ஆகவே, இந்த இழப்பீட்டை அளிப்பதற்காக ஒன்றிய அரசு கடன் வாங்கியது.

இந்தக் கடனை அடைப்பதற்காக இழப்பீட்டு மேல்வரி தொடர்ந்து விதிக்கப்பட்டுவருகிறது. இந்தக் கடன் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் முழுமையாக அடைக்கப்பட்டுவிடும் என அண்மையில் நடந்த 54ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு 2026 ஆம் ஆண்டு, மார்ச் 31 வரை வசூலாகும் இழப்பீட்டு மேல்வரியை, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்கு ஏற்ப பிரித்து வழங்கலாம் என கூறப்படுகிறது. இந்தத் தொகை சுமார் 40,500 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், இது தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இச்சூழலில் ஜிஎஸ்டி வரி மாற்றி அமைத்ததால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் வரி இழப்பை ஒன்றிய அரசு ஈடு கட்ட வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7:

இராமேஸ்வரம் அருகே, பாம்பனில் இருந்து சீனி என்பவரது விசைப்படகில், கடந்த ஆகஸ்ட் 5 இல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையில் உள்ள புத்தளம் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அனைவரும், செப்டம்பர் 1 ஆம் தேதி புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இராமேஸ்வரம் மீனவர்களுக்கு, தலா 5 கோடி வீதம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையானது, இந்திய மதிப்பில் 14.50 கோடி ரூபாய் ஆகும். எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைப்பதும், கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை அரசின் அடாவடித்தனத்தை தொடர்ந்து இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது மீனவ சமூகத்தை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இலங்கை அரசின் இத்தகைய மீனவர்கள் விரோத செயல்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8:

நாக்பூரில் உள்ள கவி கல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அபினவ் பாரதி சர்வதேச கல்விக் கட்டிடத்தை ஆகஸ்ட்-1 ஆம் தேதி திறந்துவைத்துப் பேசிய மோகன் பாகவத், “சமஸ்கிருதத்தை புரிந்து கொள்வதற்கும், அதில் உரையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் சமஸ்கிருத மொழியை கற்றுக்கொண்டேன். ஆனால், என்னால் சரளமாகப் பேச முடியவில்லை. சமஸ்கிருதம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும். சமஸ்கிருதத்தை நாட்டின் தொடர்பு மொழியாக மாற்ற வேண்டும். இதற்கான அவசியம் இருக்கிறது. நாடு தற்சார்பு அடைய வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து இருக்கிறது. அதற்காக நாம் நமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.“ “சமஸ்கிருதம்தான் அனைத்து இந்திய மொழிகளுக்கும் மூலம். சமஸ்கிருதத்தை அறிந்து கொள்வது என்பது நாட்டை புரிந்து கொள்வது போன்றது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 2014-25 வரையிலான ஆட்சி காலத்தில் சமஸ்கிருத மொழியை பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழுக்கு ஓராண்டு சராசரியாக ரூ.1.3 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், சமஸ் கிருத மொழிதான் எல்லா மொழிகளுக்கும் தாய் என்ற கூறி இருப்பதும், சமஸ்கிருத மொழியை தொடர்பு மொழியாக்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கும் மதிமுக மாநாடு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

தீர்மானம் 9:

மரபணு மாற்றப்பட்ட இரண்டு நெல் ரகங்கள் விரைவில் சந்தைக்கு வர இருப்பதாக கடந்த மே மாதம், 2025 ஒன்றிய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்திருந்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் உருவாக்கியுள்ள இந்நெல் ரகங்களுக்கு கமலா, பூசா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நெல் ரகங்கள், காலநிலை மாற்றப் பாதிப்புகளைத் தாக்குப்பிடித்து வளரும் எனவும், 20 முதல் 30 சதவீதம் வரை விளைச்சல் அதிகம் கொடுக்கும் எனவும், நீர்த் தேவையைக் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நெல் ரகங்கள் மரபணு மாற்றுப் பொறியியல் (Genetic Engineering) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதல்ல, மரபணு திருத்தம் (Gene edited) செய்யப்பட்டது என்னும் வாதம் இத்தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது. மேலும், பா.ஜ.க அரசும் மரபணு திருத்தம் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விதைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மரபணுமாற்றுப் பொறியியலை முறைப்படுத்தும் சட்ட அமைப்பின் அனுமதியில் இருந்து விதிவிலக்கு அளித்துள்ளது.

உண்மையில் மரபணு திருத்தத் தொழில்நுட்பம் என்பது மரபணு மாற்ற பொறியியல் போன்றதே. மரபணு மாற்ற பொறியியல் மூலம் சுற்றுச் சூழலுக்கும், மனிதர்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் உருவாகக்கூடுமோ, அதே அளவிலான பாதிப்புகள் இந்த தொழில்நுட்பம் மூலமும் உருவாகக் கூடும். ஆனால், மரபணு மாற்றப்பட்ட விதைகள் மீது செய்யப்பட வேண்டிய பல ஆய்வுகள் மரபணு திருத்த விதைகளுக்குத் தேவையில்லை என கூறுகிறது மோடி அரசு. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் பலவித பாதிப்புகள் உண்டாக்கக் கூடும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவு அனுமதிக்கப்படாமல் உள்ளது. உச்ச நீதிமன்றமும் மரபணு மாற்றப்பட்ட பொருட்களுக்குச் சட்டக்கொள்கைகளை உருவாக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்தான், மரபணுமாற்றப்பட்ட நெல்லை, மரபணு திருத்த நெல் என்னும் பெயரில் சந்தைக்கு அனுமதிக்க மோடி அரசு முயல்கிறது. இப்படி இந்த நெல் அனுமதிக்கப்பட்டால், சந்தைக்கு வரும் முதல் மரபணு மாற்றப்பட்ட உணவாக இது இருக்கும்.

கடந்த காலங்களில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைச் சந்தைக்குக் கொண்டு வர நிறுவனங்களே முயன்றன. ஆனால், தற்போது மோடி அரசு நேரிடையாக மரபணு மாற்ற விதைகளைச் சந்தைக்குக் கொண்டு வர முயல்கிறது. இதற்காகச் சட்டங்களை மாற்றுகிறது. தொழில்நுட்பம் மூலம் பொதுச் சொத்தாக உள்ள விதைகளைத் தனியார் சொத்தாக மாற்ற முயல்கிறது. முக்கியமாக உணவு இறையாண்மை கேள்விக்கு உள்ளாகிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகள் மட்டுமே சந்தையில் இடம்பெறும் நிலையில், உணவு உற்பத்தி என்பது நிறுவனங்களைச் சார்ந்தே இருக்கும் நிலை உருவாகும். இத்தகைய நிலையை உருவாக்கவே மோடி அரசு முனைந்துள்ளது. எனவே மரபணு மாற்ற நெல் சாகுபடிக்கு ஒன்றிய அரசு அனுமதியை ரத்து செய்யக்கோரி வேளாண் பெருங்குடி மக்கள் போராட்டக் களத்திற்கு தயாராக வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக மாநாடு அறைகூவல் விடுகிறது.

தீர்மானம் 10:

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்ற உலகப் பொதுமறை திருக்குறள் முன்வைத்துள்ள விவசாயத்தின் பின்னால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயிரோட்டமான வாழ்க்கை நெறி, இன்று கார்ப்பரேட்டுகளால் மாற்றப்பட்டு ‘சுழன்றும் கார்ப்பரேட்டுகள் பின்னது உலகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயம் படிப்படியாக விவசாயிகள் கையிலிருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மாறிக் கொண்டுள்ளது. விதை முதல் விற்பனை வரை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களான வேளாண் வர்த்தக நிறுவனங்கள் பாசிச மோடி அரசின் துணையுடன் விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறது. 2020-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை எதிர்த்தும், பல கோரிக்கைகளை முன்வைத்தும் விவசாயிகள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஒன்றிய அரசோ, போராடிய உழவர்களையும், அவர்களின் தலைவர்களையும், காலி°தான் ஆதரவாளர்கள், மாவோயி°ட்டுகள், நக்சலைட்டுகள் என்றும், எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் என்றும், அவதூறு பிரசாரம் செய்தும், போராட்டத்தைக் கேவலப்படுத்தியும், நேர்மையற்ற முறையில் ஒடுக்கவும் முயன்றார்களே தவிர, விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவோ, தீர்க்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் விவசாயிகள் வீரமுடன் போராட்ட களத்தில் உறுதியாக நின்றனர். 700 விவசாயிகள் தங்கள் உயிரினை தந்தார்கள். உச்ச நீதிமன்றம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண குழு ஒன்றை அமைத்தும், விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக மூன்று சட்டங்களையும் கைவிடுவதாகவும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி கொடுத்த பின்னரே, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

1. குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) சரியான முறையில் தீர்மானித்து, அதை சட்டபூர்வமாக்குவது.

2. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது.

3. வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது.

4. போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது.

5. போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவது.

6. உலக வர்த்தக அமைப்பின் நிர்ப்பந்தங்களில் இருந்து வெளியேறுவது.

விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளில் மிகவும் முக்கியமான கோரிக்கை, குறைந்தபட்ச ஆதார விலையைத் தீர்மானிப்பதும், அதற்கு சட்டபூர்வ உத்தரவாதமும்தான். குறைந்தபட்ச ஆதார விலை ஆளுஞ, நிர்ணயம் செய்வதில் எப்படி விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறதோ, அதைப் போலவே பயிர் காப்பீட்டு திட்டத்திலும் விதிமுறைகளை கடுமையாக்கி விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கிறது. பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியே தான் பணம் செலுத்துகின்றனர். ஆனால், மழையால் பயிர்கள் சேதமடையும் போது, ஒட்டுமொத்த வருவாய் கிராமமும் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என விதிமுறை இருப்பது எந்த வகையில் நியாயமாகும்? அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான பயிர் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இப்படி இருக்கையில், தனிநபர் பயிர் காப்பீடு ஒன்றே தீர்வு என விவசாயிகள் கருதுகின்றனர். ஒன்றிய அரசு விவசாயிகளின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும். வன விலங்கான யானை மனித மோதல் தடுக்கவும், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாய சாகுபடி பயிர்கள் அழிவைத் தடுக்கவும், ஒன்றிய அரசு வனவிலங்குகள் சட்டத்தில் தேவையானச் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கழக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11:

நம் நாட்டில் பாரம்பரிய முதன்மையான தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத் தொழிலையும், அதை நம்பியுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களையும் காப்பதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.

கைத்தறி நெசவாளர்கள் பெரும்பாலானவர்கள் கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாததால் தனியாரிடம் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் அவல நிலை உள்ளது .தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெரும்பான்மையான சங்கங்கள் செயல்படாமல் உள்ளன . அவற்றில் உள்ள உறுப்பினர்கள் தனியாரிடமே சொற்ப ஊதியத்தில் வேலை செய்ய வேண்டி நிலமை உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் ஒருங்கிணைத்து, ஒரு சங்கத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் எந்த ஒரு சங்கத்திலும் வேலை வாய்ப்பு பெற்று தொழில் செய்ய அரசு புதிய விதியை வகுத்திட வேண்டும்.

மேலும் இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாகும் துணிகளை கைத்தறி தயாரிப்பு என நுகர்வோரை ஏமாற்றி விற்பனை செய்யும் ஜவுளி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கைத்தறி நெசவுத் தொழிலை காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும். மேலும் கதர் கிராம கைத்தொழில் துறை மூலமாக ஆண்டு முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 12:

தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. 1998, 1999ஆம் ஆண்டுகளில், செம்மணிப் படுகொலைப் புதைகுழி உலகத்துக்குத் தெரிந்து பேரரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எவராலும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. சிங்களப் படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொன்று 1998 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி நடந்தது. கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலத்தில்,,, “செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல, இன்னும் பலர் - 300 இல் இருந்து 400 வரை - புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை.

எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்றான். அப்போதுதான் அந்தக் கொடுமைகள் முழுமையாக வெளியாகி உலகத்தை அதிர வைத்தன. 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஹோர்ஸ்ட் அவர்களை சந்தித்து மனு அளித்தார். கொசோவோ நாட்டில் அல்பேனிய முஸ்லிம்கள் 80 பேர் கொன்று புதைக்கப்பட்ட புதைக்குழிகளை தோண்டி எடுத்து உண்மையைக் கண்டறிய அமெரிக்காவின் “பிசிசியன் பார் ஹியூமன் ரைட்ஸ்” அமைப்பை அனுப்பியதைப் போல 400 ஈழத் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட செம்மணிப் புதைக் குழியைத் தோண்டி எடுத்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன் முதலில் கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் செம்மணி புதைக்குழியைத் தோண்டி எடுத்து ஆய்வு நடத்த நிபுணர் குழுவை அனுப்பியது. எலும்புக் கூடுகள் அங்கே தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததன. ஆதாரங்கள் வெளியே வந்தன. கால் நூற்றாண்டு கடந்து விட்ட பின் இப்போது அந்த கிராமத்தில் கட்டிடமொன்று கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது ஏராளமான எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன.

அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு மேலும் தோண்டியபோது, ஒரு தாய் தன் குழந்தையைக் கட்டியணைத்தபடியே மரித்துப் போயிருந்த காட்சி மட்டுமின்றி இன்னும் பல்வேறு நிலைகளில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுக் கொண்டே இருகின்றன. ஆர்மேனியாவில் ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு அந்நாட்டு ராணுவ வீரர்கள் துணை நின்றார்கள் என்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அதைப் போல ஈழத்திலும் செம்மணி முதற்கொண்டு பல பகுதிகளிலும் இலங்கை இனவெறி அரசு நடத்திய படுகொலைகளை முன்வைத்து இனப்படுகொலை செய்த ராணுவத்தினரையும், அவர்களுக்கு உத்தரவிட்ட இனப்படுகொலை இலங்கை அரசையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச நீதிமன்றம் இப்போதாவது முயற்சிக்க வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழி என்பது 60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த இனப் படுகொலைகளுக்கு தனித் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வாக இருக்க முடியும். கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2011, ஜூன் 1 ஆம் நாள் பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரஸ்சல்சில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் முதன் முதலில் வலியுறுத்தியதைப் போல, தமிழ் ஈழம் அமைவதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும். இந்த இலட்சியத்தை நிறைவேற்ற உலகத் தமிழினம் தொடர்ச்சியாக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement