காரைக்குடி மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துதுரைக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் மொத்தம் 36 உறுப்பினர்கள் உள்ளனர். மேயராக முத்துதுரை பதவி வகிக்கிறார். திமுக சார்பில் (மேயர் உட்பட) 23 பேர், அதிமுக சார்பில் 7 பேர், காங்கிரஸ் சார்பில் 3 பேர், சுயேட்சைகள் 2 பேர் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மதிமுக உறுப்பினர் ஒருவர் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மேயர் முத்துதுரைக்கு எதிராக சுயேச்சை உறுப்பினர் மற்றும் அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும், இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர் ராம்குமார் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 7ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடத்தி வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை காரைக்குடி மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த கூட்டத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் 7 பேரும், சுயேட்சை உறுப்பினர் ஒருவர் உட்பட மொத்தம் 8 பேர் மட்டும் வந்திருந்தனர். இதையடுத்து, போதிய கோரம் இல்லாததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக மாநகராட்சி கமிஷனர் சங்கரன் அறிவித்தார்.