எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய சமூக பிரிவுகளில் வசதியானவர்களை இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றதால் பரபரப்பு
டெல்லி: பட்டியலின, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள வசதி படைத்தவர்களை இட ஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்கக்கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கான பலன்கள் உண்மையான ஏழை எளிய மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், கொள்கைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பட்டியலின (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகிய பிரிவுகளில் உள்ள வசதி படைத்தவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெரும்பான்மையான பலன்களைப் பெற்றுவிடுகின்றனர். இதனால், அதே சமூகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் இடஒதுக்கீட்டின் வாய்ப்புகளை இழக்கின்றனர்.
இதுபோன்ற நடைமுறையானது, இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கிறது. எனவே அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கான பலன்கள் உண்மையான ஏழை எளிய மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், கொள்கைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக வரும் அக்டோபர் 10ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், மனுவின் விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், ‘பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர், இட ஒதுக்கீட்டின் மூலம் உயர் அரசுப் பதவிகளை அடைந்துள்ளனர்.
அவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறியுள்ளனர். அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியையும் வசதிகளையும் வழங்க முடிகிறது. இத்தகைய சூழலில், வசதி படைத்த அவர்கள், தங்கள் சமூகத்தில் உள்ள வறுமையில் வாடும் மற்றவர்களின் வாய்ப்புகளைப் பறித்து, இடஒதுக்கீட்டின் பலன்களைத் தொடர்ந்து அனுபவிப்பது சரியா? என்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், இட ஒதுக்கீட்டின் பலன்கள் மிகவும் பின்தங்கியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, பட்டியலின சமூகத்தினரை மாநில அரசுகள் துணை வகைப்படுத்தலாம் என்று கூறியது.
மேலும், பட்டியலின சமூகத்தில் உள்ள வசதி படைத்தோர் பட்டியலை (கிரிமிலேயர்) இட ஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்குவதற்கான உரிய விதிகளை வகுக்குமாறும் அப்போது உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள வசதி படைத்தவர்களை இட ஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்கக்கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதால், இந்த விவகாரம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.