ஆய்வுக்கு பின் மதுரை கோட்ட மேலாளர் தகவல் பாம்பன் தூக்குப்பாலம் பழுதுக்கு சாப்ட்வேர் பிரச்னையே காரணம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் செங்குத்து தூக்கு பாலத்தில் கடந்த 12ம் தேதி தொழில்நுட்ப கோளாறால் 4 மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நடுவழியில் நின்றன. பின்னர் தொழில்நுட்ப கோளாறு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், அனைத்து ரயில்களும் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆமை வேகத்தில் கடந்து சென்றன.
பாலத்தில் 50 கிமீ வேகத்தில் கடந்த சென்ற ரயில்கள் மெதுவாக ஊர்ந்து செல்வது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பாலத்தின் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்தது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேற்று புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா கூறியதாவது:
பாம்பன் புதிய ரயில் பாலம் பல்வேறு வகையான புதிய தொழில்நுட்பத்தால் ஆனது. உயர்த்தி இறக்குவதில் சாப்ட்வேர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது பெரிய தொழில்நுட்ப கோளாறு இல்லை. கட்டமைப்பில் எந்த பிரச்னையும் இல்லை. இது டிரான்ஸ்மிஷன் சாப்ட்வேரில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு தான். சரி செய்த பின்பு மூன்று முறை சோதனை செய்தோம், சரியான நிலையில் இயங்குகிறது.
செங்குத்து தூக்குப்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முதன்முதலாக மின்சார ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. விரைவில் மின்சார ரயில் சேவை துவங்கும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் ஐந்தாவது நடைமேடையில் உள்ள பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.
* மின்சார ரயில் சோதனை வெற்றி
பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்.6ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதன்முதலாக மின் விநியோகம் கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்ட மின்சார ரயில் இன்ஜின், பாம்பன் ரயில் பாலம் வழியாக வெற்றிகரமாக கடந்து சென்றது.