தவறான ஆராய்ச்சி கட்டுரைக்கு இனிமேல் மைனஸ் மதிப்பெண்: ஒன்றிய அரசு விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்ஐஆர்எப்) உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை எதிர்மறை மதிப்பெண் வழங்கப்பட்டது இல்லை. இந்த நிலையில், பல அளவுருக்களுக்கு எதிர் மறை மதிப்பெண்களை என்ஐஆர்எப் வழங்க உள்ளது. இந்த நிலையில், தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவர் அனில் சஹஸ்கரபுத்தே நேற்று கூறுகையில்,‘‘தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு விரைவில் எதிர்மறை மதிப்பெண்ணை அறிமுகப்படுத்தும்.
இதில் திரும்ப பெறப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சி முறைகேடுகள், தரவுகளை தவறாக சித்தரிப்பதற்கு மதிப்பெண் குறைக்கப்படும். முதல் முறையாக, ஆராய்ச்சி முறைகேடுகள் மற்றும் தரவுகளை தவறாக சித்தரிப்பதற்கு எதிராக செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது போன்றவற்றுக்கு தரவரிசை முறையில் அபராதங்கள் விதிக்கப்படும். எதிர்மறை மதிப்பெண் முறைக்கான வரைவு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இது அறிமுகப்படுத்தப்படும்’’ என்றார்.