கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 32,844 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
*ஆட்சியர் தகவல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நீலமங்கலம் ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்வதை ஆட்சியர் பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு துணை தலைவர் விமலாமுருகன், நீலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரும் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவருமான ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஊரக பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகள் வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுவரை 72 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இம்முகாமில் பட்டியலிடப்பட்ட சேவைகள் தொடர்பாக 16292 கோரிக்கை மனுக்களும், இதர துறை சார்ந்த 16,552 கோரிக்கை மனுக்கள் என மொத்தம் 32,844 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இம்மனுக்களின் மீது விரைவாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தினார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மேலும் 90 முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
இம்முகாமில் கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், தாசில்தார் பசுபதி, மாவட்ட கவுன்சிலர் முருகேசன், நீலமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அசோகன், ஊராட்சி செயலர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.