காவேரிப்பாக்கம் அருகே 2 கி.மீ தூரத்திற்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது உப்பரந்தாங்கல் கிராமம். சேரி ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பகுதிநேர ரேசன் கடை, உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.
இந்நிலையில் இந்த கிராமத்தின் வழியாக பன்னியூர் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. ஆனால் தற்போது இந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே குண்டும்குழியுமாக உள்ளது. மேலும் தார்சாலையை ஆங்காங்கே முட்புதர்கள் ஆக்கிரமித்து காணப்படுகின்றன.
இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.