குடியரசு துணை தலைவர் தேர்தல் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்: கார்கே, ராகுல், சரத்பவார் பங்கேற்பு
புதுடெல்லி: நாட்டின் குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (68) பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று முன்தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் (79) நேற்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்காக நாடாளுமன்றத்திற்கு வந்த அவர் மகாத்மா காந்தி மற்றும் பிற தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை பொதுச் செயலாளர் பி.சி.மோடியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார் பிரிவு) தலைவர் சரத்பவார், திமுக எம்.பி கனிமொழி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.
தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரிசோதித்த பின், சுதர்சன் ரெட்டி அங்கிருந்த பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் தேர்தல் அதிகாரி, வேட்புமனுவின் ஒப்புதல் சீட்டை வழங்கினார். துணை ஜனாதிபதி வேட்பாளரின் வேட்புமனுவை குறைந்தபட்சம் 20 எம்பிக்கள் முன்மொழிய வேண்டும். 20 எம்பிக்கள் வழிமொழிய வேண்டும். அதன்படி இரு வேட்பாளர்களுக்கும் எம்பிக்கள் வழிமொழிந்து, முன் மொழிந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 25ம் தேதியாகும். வாக்கெடுப்பு வரும் 9ம் தேதி காலை 10.15 மணிக்கு துவங்கும். அன்றே வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவு அறிவிக்கப்படும். வேட்பு மனு தாக்கலுக்கு பின் சுதர்சன் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ‘‘எதிர்க்கட்சிகள் கூட்டு வேட்பாளராக குடியரசு துணை தலைவர் பதவிக்கு எனது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் பெருமை எனக்கு கிடைத்தது” என்று உறுதியளித்தார் .